Published : 01 Nov 2017 07:12 PM
Last Updated : 01 Nov 2017 07:12 PM
'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் முன்னணி ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி
பல்வேறு முன்னணி படங்களுக்கு ஒலி வடிவமைப்பு செய்து பெயர் பெற்றவர் ரசூல் பூக்குட்டி. தற்போது ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்துக்கு ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ரசூல் பூக்குட்டி நாயகனாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். 'ஒரு கதை சொல்லட்டுமா' என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை பிரசாத் பிரபாகரன் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து பிரசாத் பிரபாகரன் கூறியிருப்பதாவது:
இப்படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும்.
இந்த எல்லா ஒலிகளையும் ஒலிப்பதிவு செய்ய ஆசைப்படும் ஓர் ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இதொரு நீண்ட நாள் ஆசை. இப்படத்திற்கு 'ஒரு கதை சொல்லட்டுமா' என தலைப்பிட்டுள்ளோம். ரசூல் இக்கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. பூரம் திருவிழாவை முழுவதுமாக நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல.
படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே தயாரிப்பு பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ஒலிப்பதிவு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமராக்களைக் கொண்டு அந்த விழாவில் வாசித்த 300-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம்.
கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும்படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT