Last Updated : 02 Nov, 2017 04:09 PM

 

Published : 02 Nov 2017 04:09 PM
Last Updated : 02 Nov 2017 04:09 PM

காவல்துறை பணியும் சேவை சார்ந்தது தான்: கார்த்தி

மருத்துவத்துறை போல காவல்துறை பணியும் சேவை சார்ந்தது தான் என்று 'தீரன் அதிகாரம் ஒன்று' இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி பேசினார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. ஒளிப்பதிவாளராக சத்யாவும், இசையமைப்பாளராக ஜிப்ரானும் பணிபுரிந்திருக்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவம்பர் 2) சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கார்த்தி பேசியதாவது:

ஒவ்வொரு கதை வரும் போதும், இக்கதைக்கு யார் எடிட்டர், ஓளிப்பதிவாளர் என்பது முடிவு செய்வது வரை சவாலாக இருக்கிறது. ஒரு கதை புதுமையாக வரும்போது, மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இக்கதையின் சம்பவம் மறுபடியும் என்னிடமே வந்து கொண்டிருந்தது. 'சிறுத்தை' படத்துக்காக சில காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்தேன். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக நிறைய பேசினார்கள். 6 வருடங்கள் கழித்து இக்கதையை வினோத் கூறும் போது, 'இதான் எனக்கு தெரியுமே' என்று சொன்னேன். மறுபடியும் இச்சம்பவம் நம்மையே சுற்றுகிறதே, இக்கதையை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன். 'சதுரங்க வேட்டை' எனக்கு மிகவும் பிடித்த படம். அப்படம் பல தகவல்களை கூறியது. ஆகையால் இயக்குநர் வினோத்தோடு பணிபுரிய வேண்டும் என விரும்பினேன்.

ஒரு தகவலைச் சொல்றோம், அதை சரியாகச் சொல்ல வேண்டும் என இயக்குநர் வினோத் மிகவும் மெனக்கெடுவார். நிஜ சம்பவத்தின்போது பணிபுரிந்த சில காவல்துறை அதிகாரிகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இப்படத்தின் ட்ரெய்லரில் எவ்வளவு ஓடியிருப்பேன் என்று பார்த்திருப்பீர்கள். இன்னும் கொஞ்சம் ஓடியிருந்தால் மாரத்தான் போட்டியில் ஜெயித்திருப்பேன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் இக்கதையில் பல்வேறு முகங்கள் இருக்கும். முழுமையாக ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் கதை தான் இது. ஆனால், இக்கதையில் உண்மைக்கு பக்கத்திலிருந்து ஒரு காவல்துறை அதிகாரியை காட்டியுள்ளோம். பேருந்தின் மீது சண்டையிட்டு இருக்கிறேன் என்றாலும், ஒர் அமைப்புக்குள் இருப்பதால் காவல்துறை அதிகாரிகளுக்கு இருக்கும் வரம்புகளை கூறியிருக்கிறேன்.

சுற்றியிருக்கும் காவல்துறையினர் மீது தவறான எண்ணமிருந்தாலும், உண்மையான காவல்துறை அதிகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். வேலையை விட்டுப் போய்விடலாமா என்ற நிலையில் தான் காவல்துறை பணி இருக்கிறது. 6 கோடி பேருக்கு 1 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள் என்றால், எப்படி பணிபுரிய முடியும்? மருத்துவர் என்பது எப்படி சேவை சார்ந்த பணியாக இருக்கிறதோ, காவல்துறை பணியும் சேவை சார்ந்தது தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

மறுபடியும் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தும். காவல்துறையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்வீர்கள். காவல்துறையைப் பற்றிய பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x