Published : 31 Jul 2023 05:46 AM
Last Updated : 31 Jul 2023 05:46 AM

திரை விமர்சனம்: பிட்ஸா 3

நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் நளன் (அஸ்வின்), காவல் ஆய்வாளர் பிரேமின் (கவுரவ்) தங்கை கயலை (பவித்ரா) காதலிக்கிறார். நளனின் உணவகத்தில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் நளன் மீது, 2 கொலைப் பழிகள் விழுகின்றன. அதைச் செய்தது யார், நளனுக்கும் அந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை விரித்துச் சொல்கிறது கதை.

வீடு, அரண்மனை, கைவிடப்பட்ட கட்டிடம் ஆகியவற்றில் பேய்களும் ஆவிகளும் மறைந்திருப்பதாகச் சித்திரிக்கப்படும் பெரும்பாலான படங்களில், காட்சிகளும் திருப்பங்களும் எளிதில் யூகிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப் பட்டிருக்கும். அதேபோல், பழிவாங்கும் ஆவிகளுக்குச் சொல்லப்படும் பிளாஷ் பேக்குகள், உப்புச்சப்பில்லாத உருட்டுக்களாக இருக்கும். இந்த அம்சங்கள் எதிலும் கோட்டைவிடாமல் கதைக் களத்தையும் நிகழ்வுகளையும் ஈர்ப்பான வகையில் அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த்.

படம் தொடங்கியதுமே எகிப்திய மம்மி பொம்மை ஒன்றை அறிமுகப்படுத்தி, அதன் வழியாக முன்னோட்டம் காட்டி, முக்கிய கதைக்குள் பார்வையாளர்களைத் தயார்படுத்தி அழைத்துச் செல்லும் உத்தி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. நளனின் உணவகத்தில் திடீரெனப் பிரபலமாகிவிடும் புதியவகை இனிப்பும் அதன் பின்னணியில் நூல் பிடித்தபடி விலகத்தொடங்கும் மர்ம முடிச்சுகளும் தங்கு தடையற்ற திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கிவிடுகின்றன. அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கும் அந்த நவீன உணவகத்துக்கான கலை இயக்கம், இரவில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ‘ஹாரர்’ உணர்வைக் கடத்துகின்றன.

நளன், பிரேம், ராணி, மித்ரா, வீரா, தாமு, யோகி ஆகிய கதாபாத்திரங்களை வாழ்க்கைக்கு நெருக்கமாக வடிவமைத்திருப்பதும் அவற்றுக்கான நடிகர்களைப் பொருத்தமாகத் தேர்வு செய்து அவர்களிடம் தரமாக வேலை வாங்கியிருப்பதும் பலம்.

நளனான வரும் அஸ்வின், பிரேம் ஆக வரும் கவுரவ், மித்ராவாக வரும் அபிநட்சத்திரா, ராணியாக வரும் அனுபமா குமார், வீராவாக வரும் நாராயணன், தாமுவாக வரும் காளி வெங்கட், விஸ்வநாதனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் கதாபாத்திரங்களை வெளிக்காட்டும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்கள்.

டிஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் விளைவுகளைத் தரமாக உருவாக்க, பிரபு ராகவ்வின் ஒளிப்பதிவு பேரளவில் கைகொடுத்திருக்கிறது. அருண் ராஜின் அளவான பின்னணி இசை ஆச்சர்யம். பெரும்பாலான காட்சிகளில் அவர், இசைக்காமல் விட்டிருப்பதும் சிறப்பு.

11 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘பீட்சா’ படம் தந்த தரமான ஹாரர் திரை அனுபவம், அதன் 2-ம் பாகத்தில் ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், ‘பிட்ஸா 3 தி மம்மி’ முதல் படம் தந்த கவுரவத்தை மீட்டுக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x