Last Updated : 15 Nov, 2017 03:03 PM

 

Published : 15 Nov 2017 03:03 PM
Last Updated : 15 Nov 2017 03:03 PM

அண்ணாதுரை இசை வெளியீட்டு விழா: பிரபல நடிகர்களை சாடிய ஞானவேல்ராஜா

'அண்ணாதுரை' இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞானவேல்ராஜா சாடிப் பேசிய நடிகர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாதுரை'. நவம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.

இவ்விழாவில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது:

'அண்ணாதுரை' படம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு, இப்படம் பெரும் லாபம் சம்பாதித்து தர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். விஜய் ஆண்டனி அனைத்து விஷயங்களிலுமே தன்னை நிரூபித்து வருகிறார். தன்னிம்பிக்கையின் மொத்த உருவமாக அவரைப் பார்க்கலாம். இளம் இயக்குநர்கள் பலரும் திரையுலகிற்கு வரவேண்டும். அதற்கு ஒரு பாலமாக விஜய் ஆண்டனி இருக்க வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக 3 புகார்கள் வந்திருக்கிறது. அனைத்துமே நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற புகார்தான். 30% படத்தை முடித்துவிட்டு இதோடு படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள், முழுமையாக முடிக்க 3 ஆண்டுகளாகும் என்று ஒரு நடிகர் கூறிய ஒரு புகாரும் வந்தது.

90% முழுமையாக எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு விஜய் ஆண்டனி மாதிரி இருக்கிறார்களோ, அதே நிலையில் 10% பேர் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள்.

அப்படத்துக்காக 18 கோடி ரூபாய் வாங்கிய பணத்தை திருப்பி அளித்திருக்கிறார்கள். தற்போது அந்த 18 கோடி ரூபாய்க்கு பதில் சொல்லப் போவது யார்? தன் மீது நம்பிக்கை வைத்து பண முதலீடு செய்த தயாரிப்பாளரை நடுரோட்டில் நிறுத்தியிருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கை என்னவாகப் போகிறது என்ற கவலையே இல்லாமல் இருக்கும் நிலையும் இந்தத் துறையில் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து 90% பேரும், ஏன் நாமும் கவலையில்லாமல் இருக்கலாமே என்ற நிலை வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. முடிந்த அளவுக்கு போராடிவிட்டு தற்போதுதான் அத்தயாரிப்பாளர் புகார் அளித்திருக்கிறார். அப்பட வெளியீட்டின் போது நடந்த பிரச்சினைக்கு நானும், கதிரேசன் சாரும் நாயகனைப் பார்க்க நட்சத்திர ஹோட்டலுக்கு இரவு 11.30 மணிக்குச் சென்றோம். காலை 5,30 மணி வரை நின்றும் கூட, கீழே வந்து பார்க்க மறுத்துவிட்டார்.

ஒட்டுமொத்தமாக 29 நாள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். 4 மணி நேரத்துக்கு மேல் படப்பிடிப்பில் இருந்ததே கிடையாது. எனக்குத் தெரிந்து இந்தியாவில் எந்ததொரு நடிகரும் இவ்வளவு தரக்குறைவாக இருந்தது கிடையாது.

இப்பிரச்சினையைத் தவிர இன்னொரு காமெடி ஜாம்பவான் இருக்கிறார். மக்கள் அனைவருமே ரசிக்கக்கூடிய காமெடியன். அவரும் ஒரு தயாரிப்பாளரை காயப்படுத்தியிருக்கிறார். அவர்களுடைய எண்ணமெல்லாம் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கிறார் என்றுதான். ஆனால், விஷால் ரொம்பத் தெளிவாக இருக்கிறார். நடிகர் சங்கம் சார்ந்த எந்ததொரு புகாரிலும் நான் தலையிட மாட்டேன், கமிட்டி நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருக்கிறார் விஷால். நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.

இந்த 3 தயாரிப்பாளர்கள் மாதிரி, மற்ற தயாரிப்பாளர் யாரும் நிற்கக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானமாக இருக்கிறது.

இவ்வாறு ஞானவேல்ராஜா பேசினார்.

எந்த நடிகரை மறைமுகமாக சாடினார் ஞானவேல்ராஜா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x