Published : 30 Nov 2017 11:48 AM
Last Updated : 30 Nov 2017 11:48 AM
சமூக வலைதளங்களில் பரவி வரும் 'மெர்சல்' வசூல் சர்ச்சை தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் தனஞ்ஜெயன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மெர்சல்'. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படத்தை தயாரித்து வெளியிட்டது தேனாண்டாள் பிலிம்ஸ். ஜிஎஸ்டி தொடர்பான வசனம் மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனம் ஆகியவை பெரும் சர்ச்சை உருவாக்கியது. இதனால் வசூலில் எந்தவொரு குறையுமே இல்லாமல் இருந்தது.
அன்புச்செழியன் கைது விவகாரம் தொடர்பாக பேசிய சிலர் "சமீபத்தில் வெளியான 'மெர்சல்' கூட தயாரிப்பாளருக்கு தோல்விப் படம்தான்" என்று கருத்து தெரிவித்தார்கள். இதனால் இணையத்தில் மீண்டும் 'மெர்சல்' சர்ச்சை உருவானது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் திரையுலகின் வர்த்தக நிபுணத்துவம் குறித்து எழுதி வரும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது:
'மெர்சல்' படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக வெளியாகும் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். இதன் பின்னணியில் ஏதோ திட்டம் இருப்பதாகவே உணர்கிறேன். தயாரிப்பாளரே இது குறித்து ஏதும் பேசாத சூழலில் இத்தகைய கணக்குகளை மற்றவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றனர். என் கணக்கின்படி அந்தப் படம் லாபத்தையே தந்தது. உண்மை விரைவில் வெளிவரும்.
'மெர்சல்' திரைப்படம் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், காட்சியாளர்கள் என அனவைருக்குமே லாபத்தையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது எனது கருத்து. அப்படி இருக்கும்போது தயாரிப்பாளருக்கு மட்டும் அது எப்படி நஷ்டத்தை ஏற்படுத்த முடியும். தயாரிப்பாளரே கணக்கு வழக்குகளைத் தெரிவிக்கட்டும். மற்றவர்கள் ஊக அடிப்படையில் ஏதாவது கணக்குகளை கூறுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT