Published : 11 Nov 2017 02:54 PM
Last Updated : 11 Nov 2017 02:54 PM
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 'நட்சத்திர கலை விழா' மலேசியாவில் ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல் கலந்து கொள்கின்றனர்.
நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக விரைவில் நட்சத்திர கலை விழா ஒன்று திட்டமிடப்படும் என்று நடிகர் சங்கப் பொதுக்குழுவின் முடிவில் தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தற்போது ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். இந்த கலை நிகழ்ச்சியில் நடனம், நகைச்சுவை மற்றும் நடிகர்களின் கலந்துரையாடல் என சுவாரசியமாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளது நடிகர் சங்கம்.
மேலும், ஆறு அணிகள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த அணிகளுக்கு சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்கவுள்ளார்கள்.
இந்த நட்சத்திர கலை விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவுள்ளார்கள். மேலும், மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. அதில் மலேசிய நடிகர்கள் ஒர் அணியிலும் தமிழ் சினிமா நடிகர்கள் ஒர் அணியிலும் பிரிந்து மோதவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியை மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடத்தவுள்ளார்கள்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நட்சத்திர கலை விழா குறித்து அறிவிக்கப்பட்டது. இச்சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி , கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் , மனோபாலா , குட்டி பத்மினி , ரோகிணி , பசுபதி , ரமணா , நந்தா , உதயா , ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.
நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். அந்த அழைப்பை மலேசிய பிரதமர் ஏற்றுள்ளதால் அவருடைய தலைமையில் மலேசிய புக்கிஜாலி அரங்கில் இவ்விழா நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT