Published : 18 Nov 2017 03:38 PM
Last Updated : 18 Nov 2017 03:38 PM

முகவரி தேடும் முகங்கள் 1: அனுஷ்கா முருகன்

சினிமா எப்போதுமே சுவாரஸ்யம்தான். ஆனாலும் இன்னும் இன்னுமான சுவாரஸ்யங்களையும் அள்ள அள்ளக் குறையாத அனுபவங்களையும் கொண்டது வாழ்க்கை. ஒரெயொரு படத்தில், ஒரேயொரு காட்சியில் நடித்துவிட்டாலே, முகம் பரிச்சயமாகி, போகிற வருகிற இடங்களிலெல்லாம் பத்துபேர் சூழ்ந்து பாராட்டுவார்கள். கையெழுத்து கேட்பார்கள். ஆனால் திரைக்குப் பின்னே ஆயிரமாயிரம் முகங்கள், முகவரியே இல்லாத நிலையில் இருப்பதை எத்தனை பேர் அறிவோம்; உணர்வோம்!

அந்த முகங்களைத் தேடிப் புறப்பட்ட பயணம்தான், ’முகவரி தேடும் முகங்கள்’ தொடருக்கான ஆரம்பம்.

திரையுலகில், நீங்கள் யாரையெல்லாம் திரையில் விழிகள் விரியப் பார்த்துப் பிரமித்திருக்கிறீர்களோ... அவர்கள் அனைவருக்கும் தெரிந்த, நமக்கெல்லாம் தெரியாத முகத்துக்குச் சொந்தக்காரர்... முருகன். இன்றையப் பல பிரபலங்களுக்கு சாரதி இவர்தான்.

மீனம்பாக்கம் விமானநிலையத்தில், வடபழநியில், பழைய மகாபலிபுரம் சாலையில், பின்னி மில்லில் என சினிமா ஷூட்டிங் ஏரியாக்களில் முருகனையும் அவரின் இன்னோவா காரையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

''அண்ணே... உங்களை பேட்டி எடுக்கணும்’’ என்றதும் '' அட கலாய்க்காதீங்கண்ணே’’ என்று வெள்ளந்தியாகச் சிரித்த முருகனைப் பார்த்த மாத்திரத்திலேயே எல்லோருக்கும் பிடித்துவிடும். பிறகு விஷயத்தைச் சொன்னதும், ‘என்னண்ணே... நம்மளைப் போய்... பேட்டிகீட்டினு’’ என நெளிந்து, வெட்கப்பட்ட முருகனிடம் கொட்டிக்கிடக்கின்றன, பலப்பல அனுபவங்கள்.

‘’நமக்குச் சொந்த ஊரு நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு. ஒரு தடவை வீட்ல சண்டை. ஊரைவிட்டு ஓடியாந்துட்டேன். வந்ததும் சாப்பாட்டுக்கு வழியில்ல. ‘இப்போ சாப்பிடுறோம்... அடுத்து எப்போ சாப்பாடு கிடைக்கும்’னு சாப்பிடும்போதே யோசித்த காலமெல்லாம் உண்டு. ஆனா கடவுள் பாருங்க... எனக்கு இந்தச் சென்னைல முதமுதல்ல கிடைச்ச வேலை என்ன தெரியுங்களா... சினிமா ஷூட்டிங் நடக்கற இடங்களுக்கு, சாப்பாடு ஏத்திக்கிட்டு, வண்டி ஓட்டிட்டுப் போற வேலை. ‘கையில காசும் கிடையாது பணமும் கிடையாது. ‘இந்தா வைச்சுக்கோ’னு வயசானவங்களுக்கோ யாருக்கோ... ஒரு பொட்டலம் தயிர்சாதம் கூட வாங்கித் தர வக்கில்லை. ஆனா பசியோட இருக்கறவங்களுக்கு நீ கொண்டாந்து கொடுக்கற சாப்பாடுதான் அமிர்தம். 'டேய் முருகா... என்ன வாழ்க்கை பாருடா...’ன்னு உள்ளே கேட்டுக்கிட்டுச் சிரிச்சுக்குவேன்’’ என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் முருகன்.

ஆந்திராவில் தெலுங்குச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் அனுஷ்கா. அப்போது அந்தப் பேட்டியில், ''இங்கே ஷூட்டிங் வரும்போது எவரையும் துணைக்கு அழைத்து வருவதில்லை. தமிழ்நாட்டுக்குச் செல்லும்போது யாரையாவது துணைக்கு அழைத்துச் செல்வீர்களா?’’ என்று கேட்கப்பட்டது. ‘’உண்மையைச் சொல்லணும்னா... இங்கேதான் எனக்கு துணை தேவை. யாரையாவது கூட்டிட்டு வரணும். சென்னைக்கு தைரியமா, தனியாப் போயிருவேன். மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல இறங்கி, ஒரு போன் பண்ணினாப் போதும்... அதுக்குப் பிறகு, என்னை முருகன் அண்ணன் பத்திரமாப் பாத்துக்குவார்’’ என்று டிவி பேட்டியில், முருகனைப் பெருமிதத்துடன் சொல்ல, அதை யாரோ பார்த்துவிட்டு, முருகனுக்குச் சொல்ல... இதுபற்றிக் கேட்டால், ‘’காசுபணம் எப்ப வேணா வரும். யார் வேணா சம்பாதிக்கலாம். எப்படி வேணும்னாலும் சம்பாதிச்சிட முடியும். இப்படி மனுஷாளையும் மனுஷாள்கிட்டேருந்து நல்ல பேரையும் எடுக்கறதுதாண்ணே பெரியவிஷயம். அனுஷ்கா மேடம் சொன்னதை, நானும் அப்புறமாப் பாத்தேன். பொசுக்குன்னு அழுகை வந்துருச்சுண்ணே...’’ என்று அனுஷ்காவைச் சொல்லும்போதெல்லாம் நெகிழ்கிறார் முருகன். சென்னைக்கு வருகிறாரோ இல்லையோ... வாரம் ஒருமுறையாவது முருகனிடமும் அவர் மனைவி குழந்தைகளிடமும் பேசி, நலம் விசாரிப்பாராம் அனுஷ்கா. ’’அனுஷ்கா எங்க வீட்டுப் பொண்ணுண்ணே’’ என்று சொல்லும் முருகனை, எல்லோரும் 'அனுஷ்கா முருகன்’ என்றுதான் அழைக்கிறார்கள்.

ஆனாலும் ரஜினி, பிரபு, சூர்யா, கார்த்தி, விஷால் என பலருக்கும் காரோட்டியிருக்கிறார்.

''84வது வருஷத்திலேருந்து சினிமாவுக்கும் சினிமாக்காரங்களுக்கும் கார் ஓட்டுறேன். அப்பலாம், மலையாளம், தெலுங்குன்னு எல்லா சினிமாவும் இங்கேதான் எடுப்பாங்க. வேலை இருந்துக்கிட்டே இருக்கும். டிரைவராத்தான் வேலை. சொந்தக் கார் வாங்கணும்னு ஆசை மட்டும் இருந்துக்கிட்டே இருக்கும். ’இப்ப சோறு சாப்பிடுறதே பெரிய விஷயம். உனக்கு சொந்தக் கார் ஆசையா’னு உள்ளேருந்து குரல் கேக்கும். ஆனா சொந்தமா கார் வாங்கணும்னு ஒரு ஆசை உள்ளுக்குள்ளே ஓடிக்கிட்டே இருந்துச்சு.

மலையாளப் படத்துக்கு சாப்பாடு எடுத்துட்டுப் போற வேலைதான் முதல்ல கிடைச்சுச்சு. தமிழ், தெலுங்கு, ஹிந்தின்னு எல்லா பட வேலைகளுக்கும் போனதுல என்னடா லாபம்னா, எல்லா மொழியையும் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அப்ப சம்பளம் குறைவுதான். ஆனா மரியாதையையும் பாசத்தையும் அப்படிக் காட்டுவாங்க எல்லாரும். அவங்களுக்கு வயிறு நிறைஞ்சிரும்; எனக்கு மனசே நிறைஞ்சிரும். ஆக, இந்த சினிமால எனக்கு முதல்ல கிடைச்சது நிம்மதியும் நிறைவும்தாண்ணே!’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகன்.

’’இன்னிக்கு, ஒரு படத்தை இந்தா... தம்மாத்துண்டு பென் டிரைவ்ல அடக்கிருச்சு டெக்னாலஜி. ஆனா அன்னிக்கி ஃபிலிம் ரோல்தான். இங்கேருந்து அங்கேயும் அங்கேருந்து இங்கியுமா... தூக்கிட்டு ஓடணும். செம பரபரப்பாவும் ஜாலியாவும் இருக்கும். அப்படி எடுத்துட்டுப் போன அந்தப் படம், நூறுநாள் இருநூறு நாள்னு ஓடிருச்சுன்னா, ஏதோ அந்தப் படத்தை எடுத்த டைரக்டருக்கு எம்புட்டு சந்தோஷமோ, அம்புட்டு பூரிப்பு வந்துரும் உள்ளுக்குள்ளே! அதேபோல, படம் ஃப்ளாப்பாயிருச்சுன்னா, சோறுதண்ணியே இறங்காது ரெண்டுநாளு. கிட்டத்தட்ட முப்பது முப்பத்தி அஞ்சு வருஷமா சினிமா, சினிமா, சினிமான்னே ஓட்டியாச்சு வாழ்க்கையை’’ என்று சொல்லும் முருகன், கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இன்னோவா காரை சொந்தமாக வாங்கியிருக்கிறார்.

அந்த இன்னோவா கார்... இப்போது முருகனின் வாழ்க்கையில் இன்னொரு அங்கமாகிவிட்டது. மிக முக்கியக் கேரக்டராகிவிட்டது.

‘’இந்தக் காரை தடக்குன்னு வாங்கிடலைண்ணே. எம் பொண்டாட்டி நகைகளையெல்லாம் கழட்டிக் கொடுத்தா. அந்த நகைங்கதான் இப்ப காரா நிக்கிது. அதுக்காக, பணத்தைத் தேடி நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையற பிஸ்னஸ்லாம் கிடையாதுண்ணே.

ஆனானப்பட்ட, தீபிகா படுகோன் ஒருதடவை நம்ம கார்ல வந்தப்ப என்ன செஞ்சாங்க தெரியுமா?’’ என்று சொல்லிவிட்டு, காரின் சைடு மிர்ரரைத் துடைத்தார் முருகன்.

இன்னும் சுவாரஸ்யம் மிளிர, ஒளிரத் தகவல்களைக் கொட்டின முருகன் எனும் கேரக்டரை அடுத்த பாகத்தில் பார்ப்போம்; அவர் பேசுவதைக் கேட்போம்!

(முகம் பார்ப்போம்)

கா.இசக்கிமுத்து, தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x