Published : 13 Nov 2017 07:31 PM
Last Updated : 13 Nov 2017 07:31 PM
'அறம்' படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் ரஞ்சித்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
விமர்சன ரீதியாக இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி. கற்பி ஒன்று சேர் போராடு. இயக்குனர் மற்றும் படக்குழுவினர்க்கும் தோழர் நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்" என்று பாராட்டு தெரிவித்தார்.
ரஞ்சித்தின் பாராட்டே சமூகவலைத்தளத்தில் பெரும் எதிர்வினைகளை கொடுத்திருக்கிறது. தற்போது 280 எழுத்துகளைப் பயன்படுத்தி ட்வீட் போடலாம் என்பதால், எப்படி இயக்குநரின் பெயரைப் போடாமல் இருக்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அவருடைய ட்வீட்டிற்கு பதிலாக பலரும், "உண்மை எப்போதுமே ஜெயிக்கும்", "இயக்குநரின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு 'தோழர்' பட்டம். இதுதான் உங்கள் அறமா?" என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் 'மெட்ராஸ்' திரைப்படம் வெளியான போது, இயக்குநர் கோபியின் 'கருப்பர் நகரம்' படத்தை தழுவித்தான் ரஞ்சித் 'மெட்ராஸ்' படத்தை எடுத்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் பலரும் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித், கோபியின் பெயரைத் தவிர்த்து ட்வீட் செய்தது புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT