Last Updated : 11 Nov, 2017 06:36 PM

 

Published : 11 Nov 2017 06:36 PM
Last Updated : 11 Nov 2017 06:36 PM

பணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை: சிம்பு விளக்கம்

பணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை என்று சிம்பு விளக்கம் அளித்திருக்கிறார்.

பணமதிப்பு நீக்கம் குறித்து சிம்பு பாடியுள்ள பாடல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். இப்பாடல் குறித்து சிம்பு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அனைவருக்குமே ஒரு கருத்து இருக்கும். பணமதிப்பு நீக்கம் நடந்து ஒரு வருடம் கழித்து தான் இம்மாதிரியான பாடல் வந்துள்ளது. இப்பாடல் நான் எழுதியதோ அல்லது எனது படத்திலுள்ள பாடலோ கிடையாது. ஒரு படத்தில் வரும் காட்சிக் கோர்வையில் இருக்கும் பாதிப்புகளை சொல்வது மாதிரியான பாடல் என்பதால் தான் பாடினேன். தவறான விஷயம் எதுவுமே இல்லை. எனக்கு தெரிந்து அப்பாடலுக்கு எதிர்ப்பு எதுவுமே இல்லை. காவல்துறை தரப்பில் எதிர்ப்பு வரலாம் என்று தகவல் வந்ததால், அவர்கள் பாதுகாப்புக்கு வந்திருக்கிறார்கள்.

அனைத்து விஷயங்களுக்குமே நேர்மறை - எதிர்மறை இரண்டுமே இருக்கும். பணமதிப்பு நீக்கத்தால் நேர்மறையான விஷயம் மட்டுமே எதிர்பார்த்தோம். ஆனால், சாதாரண மக்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருந்தது. பணம் மாற்றம், ஏ.டி.எம் வாசல் காத்திருப்பு என சில சிக்கல்கள் இருந்தது. அதனை தவிர்க்க முடியாது. அதனால் மட்டுமே பணமதிப்பு நீக்கத்தில் சில கஷ்டங்கள் இருந்ததாக கருதுகிறேன்.

இப்பாடலை நான் எழுதவோ, என் படத்தில் இடம்பெற்ற பாடலோ அல்லது தயாரித்த பாடலோ கிடையாது. பாடலைப் பாட ஒப்புக் கொண்ட பிறகு, இங்கு வந்திருந்தார்கள் அப்போது தான் பாடல் வரிகளைக் கேட்டேன். ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அதைச் சொல்வதற்கு எந்ததொரு நேரத்திலுமே பயந்தது கிடையாது. சர்ச்சைகளில் சிக்க வேண்டும் என பாடவில்லை. ஏற்கனவே பல பிரச்சினைகள் வரும். ஆகையால், நானாக எந்தொரு விஷயத்தையும் செய்வதில்லை.

முதலில் இப்பாடலை சர்ச்சையாக நான் பார்க்கவில்லை. மற்றவர்கள் கருத்தைச் சொல்வது போல, ஒரு படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. சர்ச்சையை உண்டாக்க வேண்டும் என்று படக்குழுவும் பாடலை வைக்கவில்லை, நானும் பாடவில்லை. பணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை. ஒரு பாடகராக பாடியிருக்கிறேன். அவ்வளவு தான். மேலும், இப்பாடலை பாஜக-வினர் தவறாக எடுத்துக் கொண்டார்களா எனத் தெரியவில்லை.

இப்பாடலால் யாராவது காயப்பட்டு இருந்தால் மன்னிப்புக் கேட்க தயங்க மாட்டேன். என்னுடைய நோக்கம் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால், அப்படி யாரும் காயப்பட்டது போன்று தெரியவில்லை.

இவ்வாறு சிம்பு தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x