Last Updated : 07 Nov, 2017 04:43 PM

 

Published : 07 Nov 2017 04:43 PM
Last Updated : 07 Nov 2017 04:43 PM

நடிப்பின் துல்லியம்..! மகா கலைஞன் கமல்!

சிவாஜி பிரமாதமாக நடிப்பார் என்று சொல்வது எப்படிப் புதிதில்லையோ அப்படித்தான் கமல் சிறப்பாக நடிப்பார் என்பதும். நாமெல்லாம் படங்களில் கமலின் நடிப்பைப் பார்த்து, கைத்தட்டியிருப்போம். விசிலடித்திருப்போம். உறைந்து மெய் மறந்திருப்போம். ஆனால் நாம் பார்த்த, அதேசமயம் ஓர் இயக்குநர் என்கிற முறையில், கமலின் அசாத்திய நடிப்பைப் பற்றி இயக்குநர் சிகரம் பாலசந்தர் குறிப்பிட்ட இரண்டு காட்சிகளைச் சொல்வது கமலின் புத்திக்கூர்மையான நடிப்புக்குச் சான்றாக இன்னும் இன்னும் அமையும்.

’அவர்கள்’ என்றொரு படம். கமல், ரஜினி, சுஜாதாவின் நடிப்பில் கே.பி.யின் இயக்கத்தில் வெளியான படம். அவர்கள் அனுவும் ராமநாதனும்தான் பிரதானம். என்றாலும் ஜானியும் ஜானியின் கையில் உள்ள ஜூனியரும் வெகு பிரபலம். இந்தப் படத்தில் ரயிலில் அமர்ந்திருக்கும் சுஜாதாவிடம் ஜன்னலுக்கு அந்தப் பக்கம் இருந்தபடி கமல் பேசவேண்டும்.

காட்சியை விளக்கி விட்டு, கேமிராவை ஆன் செய்யச் சொல்லி உத்தரவிட்டார் பாலசந்தர். ஜன்னலில் கை வைத்தபடி, சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருக்கும் கமல், ரயில் நகரத் தொடங்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுப்பார். சுஜாதாவையும் பிளாட்பாரத்தையும் பார்த்துக் கொண்டே ஓடிவருவார். இந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் கமலை அப்படியே கட்டிக் கொண்டாராம் பாலசந்தர்.

அந்தக் காட்சி ஸ்டேஷனில் எடுக்கப்பட்டது அல்ல. செட் போடப்பட்டு எடுக்கப்பட்ட காட்சி. ரயில் ஓடுவது போலவும் அதற்குத் தக்கபடி தான் ஓடுவது போலவுமாக, அந்தக் காட்சியை பாலசந்தர் எதிர்பார்த்ததையும் தாண்டி நடித்திருப்பார் கமல்.

அதேபோல், புன்னகை மன்னன். ரேகாவுடன் மலையில் இருந்து குதித்து, ரேகா இறந்துபோக, கமல் தப்பித்துவிட, பலத்த காயங்களுடன் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பார். அவரைப் பார்க்க ஸ்ரீவித்யா வரும்போது, கமல் பேச வேண்டும். காட்சியை விளக்கிவிட்டார் பாலசந்தர். உதடு வீங்கி, முகம் வீங்கி, கையில் அடிபட்டு காயங்களுடன் இருக்கும் கமல், அப்போது ஸ்ரீவித்யாவிடம் பேசிக்கொண்டே கையில் உள்ள பஞ்சைக் கொண்டு, உதட்டில் இருந்து வழிந்து கொண்டே இருக்கும் நீரை துடைத்துக் கொண்டே பேசுவார். இது பாலசந்தரே எதிர்பார்க்கவில்லை. ‘டேய் கமல்... நீ பிரம்மராட்சஷண்டா’ என்று சொல்லி அப்படியே அணைத்துக் கொண்டார் அவரின் குருநாதர் பாலசந்தர்.

கமல் எனும் மகாகலைஞனுக்கான சோளப்பொரிகள் தான் இவையெல்லாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x