Published : 24 Jul 2023 06:15 PM
Last Updated : 24 Jul 2023 06:15 PM
சென்னை: “இனி விஜயகாந்தின் பாணியை பின்பற்றி யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அப்படி வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யின் அரசியல் முன்னெடுப்பு குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அரசியல் வேறு, சினிமா வேறு. நடிகர் விஜய் மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு கல்வி உதவியது வழங்கியது பாராட்டுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்பது குறித்து அவர்தான் கூற வேண்டும். அதற்கு முன்பே அதைப்பற்றி பேசுவது சரியானதாக இருக்காது” என்றார்.
அவரிடம், ‘விஜயகாந்தின் பாணியை பின்பற்றி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது போல தோன்றுகிறதே?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “40 ஆண்டு காலம் தன் வாழ்க்கையை பலருக்கும் முன்னுதாராணமாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இனி யார் நினைத்தாலும் அவரைப்போல யாராலும் வர முடியாது. எதையும் எதிர்பார்க்காமல் அனைவருக்கும் உதவியவர் விஜயகாந்த். அவரைப்போல மற்றவர்களும் வர நினைத்தால் அதன் விளைவு மோசமாகத்தான் இருக்கும்.
காரணம், பிறந்த நாள், கல்வி உதவி, அன்ன தானம், லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி என எல்லாவற்றுக்கும் விஜயகாந்த் ஒரு முன்னுதாரணம். அவர் வழியில் மக்களுக்கு நல்லது செய்தால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவரைப்போல வர முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதனால் அதை பொறுந்திருந்து பார்ப்போம்” என்றார் பிரேமலதா விஜயகாந்த். | வாசிக்க > தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT