Last Updated : 12 Nov, 2017 04:41 PM

 

Published : 12 Nov 2017 04:41 PM
Last Updated : 12 Nov 2017 04:41 PM

தணிக்கைக் குழுவினர் மீது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன இயக்குநர் கடும் சாடல்

தணிக்கைக் குழுவினர் மீது 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' இயக்குநர் ராகேஷ் கடுமையாக சாடியுள்ளார்

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் படம் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன'. ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில் துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, ஜே.டி.சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இன்றைய சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி 'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன' கதை நகர்கிறது. "இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக்கூடிய சுதந்திரத்தின் எல்லை பெண்களுக்கு உண்டா என்று கேட்டால் இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடவேதான் பெண்கள் தங்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பேன்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ராகேஷ்.

இப்படத்துக்கு மிகவும் போராடியே தணிக்கை வாங்கியுள்ளது படக்குழு. இது குறித்து இயக்குநர் ராகேஷ் கூறியிருப்பதாவது:

இன்று படம் இயக்கவே என்ன பாடு என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் இங்கு இதை எடுக்கலாம். இதை எடுக்கக்கூடாது என்ற முன் அறிவுறுத்தல் இல்லாத அல்லது இதை ஏற்றுக்கொள்வார்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எந்தவித வழிகாட்டுதலுமில்லாத ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில்தான் படமெடுக்க வேண்டியுள்ளது.

காட்சிகள் அமைத்து அதை படமாக்கி காட்சிகளைக் கோர்த்து முழுமை பெற்ற ஒரு படமானபின் அதை இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்போ அந்த காட்சியை உருவாக்க செலவழித்த பணம் எல்லாம் வீண்தானே?. ஒரு தணிக்கை உறுப்பினர் இந்தக் காட்சி படத்தில் இருக்கக்கூடாது என சொல்லத் தெரிகிறது. அது ஏன் இருக்கக்கூடாது என அவருக்கு சொல்லத் தெரியும்போது, அது ஏன் ஒரு இயக்குநருக்கு தெரியாமல் போகிறது என்ற கேள்வி வருகிறதே? அதற்கான பதில் என்ன?

அப்படி எந்த விதிகளும் வரைமுறைகளும் இந்த தணிக்கையில் தெளிவாக இல்லை. இந்த சினிமா எடுப்பவர்களுக்கு அந்த வழிகாட்டுதல் ஒரு புத்தகமாகவோ அல்லது வகுப்பாகவோ சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்வேன்.

அப்படியொரு திட்டவட்டமான விதிமுறைகள் ஏன் இல்லை என்பது என் கேள்வி?. ஆளுங்கட்சியின் போது படம் எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி வரும் கருத்துகள் அல்லது அவரைப் பற்றிய தவறான காட்சிகள் அனுமதிக்கப்படும். ஆளுங்கட்சியில் உள்ளவர் பற்றி அதே வார்த்தையில் காட்சிப்படுத்தப்பட்டால் அந்தக்காட்சி வெட்டப்படும். இதுதான் தணிக்கை.

இப்படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் தணிக்கை கிடைக்கவில்லை. மறுதணிக்கைக்குப் பின்னரே U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x