Last Updated : 07 Nov, 2017 11:06 AM

 

Published : 07 Nov 2017 11:06 AM
Last Updated : 07 Nov 2017 11:06 AM

கமல், உங்களிடமிருந்து எங்களுக்கு நிறைய வேண்டும்!

கமல்ஹாசனின் 63-வது பிறந்தநாளை ஒட்டி, சமீபத்தில் 'இந்து டாக்கீஸ்' இணைப்பிதழில் வெளியான கட்டுரை இங்கே மறு பகிர்வாக...

தனது கலையுலக வாழ்க்கையில் 57 ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் கமல். தமிழில் கதாநாயகனாக அவர் முதன்முதலில் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 42 ஆண்டுகள் ஆகின்றன. தேசிய விருது தொடங்கி, தற்போது செவாலியே விருதுவரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாகவும் கலை முயற்சிகளைச் செய்துவருபவராகவும் ஒரே நேரத்தில் விளங்குகிறார். தமிழில் இது ஓர் அபூர்வமான கலவை. தொழில்நுட்பம், கலை என்று எல்லாவற்றிலும் எண்ணற்ற பரிசோதனை முயற்சிகளை அவர் செய்துபார்த்திருக்கிறார். என்றாலும் உலக சினிமா ரசிகரை அவர் எந்த அளவுக்குத் திருப்திபடுத்தியிருக்கிறார் என்ற கேள்வியும் முக்கியமான ஒன்று.

உலக நாயகன், உலகத் தரத்தை நோக்கித் தமிழ் சினிமாவைக் கொண்டுசெல்பவர் என்றேஅவரது ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். அவரும் உலக சினிமாவை நோக்கித் தமிழ் சினிமாவை எடுத்துச் செல்வது குறித்துக் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பேசிவந்திருக்கிறார்.

உலக சினிமாவைப் பற்றித் தமிழில் கமல் பேச ஆரம்பித்தபோது மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்ற ஒரு சிலரே அதை நோக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று அப்படியில்லை. பெரும்பாலான இயக்குநர்கள் வரும்போதே உலக சினிமாவைக் கரைத்துக் குடித்துவிட்டோ, அல்லது தங்கள் படைப்புகளில் கொஞ்சம் உலக சினிமாவின் டிக்காஷனை இறக்கிவிட்டோதான் தங்கள் வருகையை அறிவிக்கிறார்கள். இன்று பார்க்கும்போது பூஜ்ஜியத்திலிருந்து சில அங்குலங்கள் நகர்ந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அந்த நகர்வில் கமலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இன்று தமிழ் சினிமாவில் கலை முயற்சிகள் சிறுசிறு வெற்றிகள் அடைவதில் கமல் போன்றவர்கள் போட்ட பாதையும் முக்கிய காரணம் என்றாலும் கமலிடம் எதிர்பார்த்த அற்புதம் ஏன் இதுவரை நிகழவில்லை?

கமலின் சிந்தனை ரொம்பவும் ‘பெரியதாக’ இருப்பதுதான் அவரது வெற்றி, தோல்வி இரண்டுக்கும் காரணமோ என்று தோன்றுகிறது. உலகத் தரத்தை நோக்கிய பயணத்தில் மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா போன்றவர்கள் குறைகள் உள்ளதாயினும் எளிய, சிறிய முயற்சிகளை மேற்கொண்டிருந்த காலத்தில் கமல் பிரம்மாண்டமான முன்னெடுப்பைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். இன்னும் அப்படியே யோசித்துக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. கோடிக் கணக்கில் செலவு செய்து, பிரம்மாண்டமாகத்தான் உலக சினிமா எடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது.

மேற்குறிப்பிட்ட படைப்பாளிகளின் முயற்சிகளில் கமலுக்கும் பங்கு இருந்திருக்கிறது. இதில் மணிரத்னத்தின் ‘நாயகன்’, சிங்கீதம் சீனிவாசராவின் ‘பேசும் படம்’ போன்ற முயற்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தொண்ணூறுகளில் ‘குணா’வின் மூலம் கமலின் அடுத்த கட்டப் பயணம் ஆரம்பித்தது. ‘ராஜபார்வை’ படத்துக்குப் பிறகு நடிகர் என்பதையும் தாண்டித் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்திய படம் அது. அவர் இயக்காவிட்டாலும் தனது படங்களை உருவாக்கும் கலைஞராக அவர் அதிகம் செயல்பட ஆரம்பித்தது அப்போதிருந்துதான். இப்போது பார்க்கும்போது பல வகைகளில் நிறைவு அளித்தாலும் கலைரீதியாக முழுமை பெறாத ஒரு படைப்பாக ‘குணா’ தோன்றுகிறது. அந்தப் படத்தின் சாதகமான அம்சமும் பாதகமான அம்சமும் கமல்தான். படம் முழுவதையும் அவர் ஆக்கிரமித்திருந்தது கலைரீதியான தோல்வியே. ‘குணா’வில் தொடங்கி சமீபத்தில் வெளியான ‘பாபநாசம்’ வரை பெரும்பாலான படங்களில்அவரது இந்த அம்சமே தூக்கலாகத் தெரிகிறது. தமிழ் சினிமா சிவாஜி பாணி நடிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லையோ என்ற எண்ணத்தை கமல் ஆங்காங்கே ஏற்படுத்தத்தான் செய்கிறார்.

‘குணா’வுக்குப் பிறகு வந்த சில ஜனரஞ்சகமான கலை முயற்சிகளிலும் ‘குணா’வின் சாதக பாதகங்களே தொடர்ந்தன. கமல் நடிப்பைப் பொறுத்தவரை ‘மகாநதி’ மிகவும் முக்கியமான மைல்கல். தன்னை அதிகம் முன்னிறுத்திக்கொள்ளாத, அடங்கிய நடிப்பு அதில்தான் கமலுக்கு வாய்த்தது. வாழ்ந்து கெட்ட மனிதராகவும், பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் பெண்ணின் தந்தையாகவும் அவர் அதில் அவ்வளவு அற்புதமாகவும், அமைதியாகவும் நடித்திருப்பார். இனம் புரியாத பெரிய சக்திகளுக்கு முன்பு சக்தி ஏதுமற்ற மனிதன் பணிந்து, குனிந்து எப்படியெல்லாம் அவமானத்தை ஏற்றுக்கொண்டு, ஏதும் செய்ய முடியாமல் குமைவானோ அதை அப்படியே நடிப்பில் கொண்டுவந்தார் கமல். தான் ஒரு நடிகன் என்பதை மறந்து ஒருபெண்ணின் தகப்பனாக அவர் வாழ்ந்ததன் வெற்றிதான் ‘மகாநதி’. ஆனாலும், உச்ச நட்சத்திரம் ஒருவர் கடைசிவரை தோல்வியடைவதை எந்த ரசிகர் ஏற்றுக்கொள்வார் என்று நினைத்து ஹீரோயிசத்தில் இறங்கும் இடத்தில் ‘மகாநதி’ தோற்றுப்போகிறது. கமல் ஏன் எளிய முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதத்திலான படம் ‘மகாநதி’. அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல்போனது கமலின் தோல்வி மட்டுமல்ல, நம் தோல்வியும்தான்.

‘தேவர் மக’னில் நடிகர் கமலைவிடப் படைப்பாளி கமலே முன்நிற்கிறார். ஆழமான வசனங்கள், சக நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெறுவது (உறுதுணை: பரதன்) என்றெல்லாம் சாதகமான அம்சங்கள் பல அந்தப் படத்தில் உள்ளன.

சில படங்கள் வெளியாகும் தருணத்தில் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் புறக்கணிக்கப்படும். காலப்போக்கில் அது கொண்டாடப்படும் நிலையை அடையும். அப்படிப்பட்ட படங்களுள் ஒன்று ‘ஹே ராம்’. காந்தி கொலையின் பின்னணியில் உள்ள இந்துத்துவ அரசியலை நுட்பமாகக் காட்டியது, பிரிவினையின் இருபக்கக் கொடூரங்கள், இடையே துளிர்க்கும் மனிதம் என்று படத்தில் பல விஷயங்கள் அற்புதமாக வந்திருந்தாலும் முழுமை கூடாத ஒரு படமாகவே அமைந்தது. சீரான திரைக்கதையில் கவனம் செலுத்தி இன்னும் கொஞ்சம் செதுக்கி எடுத்திருந்தால் அற்புதமான கலைப்படைப்பாக உருவாகியிருக்கும். கமலின் ‘ஆதிக்கம்’, ‘குணா’வைப் போலவே இந்தப் படத்துக்கும் வலிமையாகவும் பலவீனமாகவும் அமைந்துவிட்டது.

‘ஆளவந்தான்’ படத்தில் கலையின் கிறுக்குத்தனம் சில இடங்களில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். போதை மருந்து உட்கொண்ட நிலையில் கமல் வரும் இடங்கள் கலைரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை. கனவின் தன்மையை அவர் பரிசோதித்துப் பார்த்திருப்பார். சித்தியுடன் சிறு வயதில் ஏற்படும் பகை அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு விநோத மனநிலையில் படத்தின் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். மற்றபடி, கலையம்சத்திலும் ஜனரஞ்சக அம்சத்திலும் வெற்றி பெறாத படம் அது.

‘குணா’, ‘மகாநதி’ போன்ற தரமான முயற்சிகளுக்கு நேர்ந்ததே ‘அன்பே சிவம்’ படத்துக்கும் நேர்ந்தது. கம்யூனிஸம், மனிதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள், அழகான, ஆழமான உரையாடல்கள் போன்றவற்றை வைத்து ஒரு பயணம் போல் அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனரஞ்சகமாக எடுப்பதா, கலைரீதியில் எடுப்பதா என்ற ஊடாட்டத்துக்குப் பலியானது போல் தோன்றுகிறது. ஆயினும், கமலின் முக்கியமான முயற்சிகளில் அதுவும் ஒன்று.

‘அன்பே சிவம்’ படத்துக்குப் பிறகு கமலின் சொந்த முயற்சிகள் பலவும் ஹாலிவுட்தனமானவை என்பது பெரும் சோகம். ஹாலிவுட் நமது உரைகல் அல்ல என்று அவரே சொல்லிக்கொண்டிருந்தாலும் ஹாலிவுட்தனம்தான் அவரது இலக்கோ என்ற ஐயத்தை நமக்கும் ஏற்படுத்தும் விதத்தில்தான்‘தசாவதாரம்’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்கள் அமைந்திருக்கின்றன. விதிவிலக்காக, ‘உத்தம வில்ல’னில் சில தருணங்கள் மட்டுமே அமைந்திருந்தன.

‘கமல், நீங்கள் அளித்த நம்பிக்கைக்கு ஏற்ப ஏன் இன்னும் ஒரு படம்கூடத் தரவில்லை?’ என்று கேட்பவர்கள் கமலின் எதிரிகள் அல்ல. கமலால் ஊக்கம் பெற்றவர்கள், உலக சினிமாவை நோக்கிக் கமலால் அழைத்துவரப்பட்டவர்கள். “இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கியப் பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான்உணர்கிறேன்” என்று செவாலியே விருது பெற்றதையொட்டி கமல் சொல்லியிருந்தார்.

ஆம், கமலின் உண்மையான ரசிகர்கள் அவரிடமிருந்து இனிதான் நிறைய எதிர்பார்க்கிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x