Published : 14 Nov 2017 06:57 PM
Last Updated : 14 Nov 2017 06:57 PM
கந்துவட்டி பிரச்சினையால் தீக்குளித்து பெண் குழந்தையோடு இறந்த சம்பவத்தைப் பார்த்தபோது கோபம் வந்தது என்று கார்த்தி தெரிவித்திருக்கிறார்.
'சதுரங்க வேட்டை' வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் இப்படம் நவம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து கார்த்தி கூறியிருப்பதாவது:
''நாம் அனைவரும் காவல்துறை அதிகாரிகளை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ காவல்துறையில் இருப்பார்கள். காவல்துறை அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழலில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம்தான் அவர்களை ஒரு வகையான காவல்துறை அதிகாரியாக மாற்றுகிறது. காவல்துறை பயிற்சியில் அவர்கள் காவல்துறை அதிகாரியாக மாற மட்டும்தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட காவல்துறை அதிகாரியாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.
நான் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக சந்தித்த காவல்துறை அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்றுதான் முயற்சி செய்தார். ஆனால், அவர் சூழ்நிலையின் காரணமாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றத் துவங்கியுள்ளார். முதலில் குற்றத்தைக் கண்டால் அவருக்கு கோபம்தான் வரும் , பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டிக் கேட்கவும் முடிந்துள்ளது. இதனாலேயே காவல்துறை வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுப்படுத்தியுள்ளார்.
'தீரன்' படத்தில் முற்றிலும் உண்மையான ஒரு காவல்துறை அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக காவல்துறை அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும் போது எப்படி செயல்படுவாரோ அதே அளவு தான் தீரனும் இந்த படத்தில் வினை செய்வார். இதை நான் 'சிறுத்தை' படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது சாதாரணமாக எதையும் எதிர்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது. அதை தான் பல காட்சிகளில் தீரனில் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
தீரனில் நீங்கள் வேறு ஒரு கோணத்தில் காவல்துறை அதிகாரிகளை பார்ப்பீர்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து , சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டிதான் ஒவ்வொரு வழக்கையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. இதை சொல்லும் போது சாதரணமாக இருக்கும். திரையில் பார்க்கும் போது உங்களை வியக்க வைக்கும்.
இது 1995-2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும். அதை ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம். நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் மொத்த காவல்துறை நினைக்கிறோம். அது தவறு. நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் காவல்துறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.
காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையாக தீரன் கதை நாம் சொல்கிறோம். தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு வழக்குதான் இப்படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே 'நான் மகான் அல்ல' படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும். எனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன். 'தீரன்' படத்தில் வீட்டில் இருக்கும் போது 'நான் மகான் அல்ல' படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான்.
போலீஸாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பேன். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே காவல்துறை அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்தப் படத்தில் இருக்க முயற்சி செய்துள்ளேன். இப்போதுள்ள இளம் காவல்துறை அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். நிஜமாக இன்றைய காவல்துறை அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படி தான் என்னுடைய தோற்றமும் இப்படத்தில் இருக்கும்.
ராஜஸ்தான் மாதிரியான ஒரு பகுதியில் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்ணுக்குள் மறைந்துதான் பிடிக்க முடியும். அதனால் தான் ட்ரெய்லரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான். நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை காணும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது. சமீபத்தில் கந்துவட்டி பிரச்சினையால் தீக்குளித்து பெண் குழந்தையோடு இறந்த சம்பவத்தைப் பார்த்தபோது கோபம் வந்தது. இதை போன்ற சம்பவத்தை பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது
இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT