Last Updated : 21 Jul, 2023 12:46 PM

 

Published : 21 Jul 2023 12:46 PM
Last Updated : 21 Jul 2023 12:46 PM

அநீதி Review: சமகால சமூக அரசியலை காத்திரமாகப் பேசும் படைப்பு ஈர்த்ததா?

முதலாளித்துவத்தாலும், அதிகார வர்க்கத்தாலும் அநீதி இழைக்கபட்ட ஓர் எளிய மனிதனின் பழிவாங்கும் நடவடிக்கையே ‘அநீதி’யின் ஒன்லைன்.

சென்னையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் ஓசிடி பிரச்சினை கொண்ட திருமேனி (அர்ஜூன் தாஸ்). மன அழுத்தம் நிறைந்த அவரது வாழ்க்கையில் பணக்கார வீட்டு பணிப்பெண் சுப்புலட்சுமியின் (துஷாரா விஜயன்) காதல் கிடைக்க, காட்சிகள் மாறுகிறது. அதுவரை இருந்த விரக்தியான மனநிலையிலிருந்து காதல் அவரை மீட்டெடுத்து சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறது. இப்படியான சூழலில் திடீரென ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவரும் தப்பித்தார்களா? இல்லையா? இதைச்சுற்றி நடக்கும் அரசியல் என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

‘அங்காடித் தெரு’ படத்தில் சுரண்டப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவலநிலையையும், வலியையும் அழுத்தமாக பதிவு செய்திருந்த இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் அப்படியானதொரு கதையை தேர்வு செய்திருக்கிறார். இம்முறை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் கோர முகத்தையும், அதில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் நிலை, சங்கமாக ஒன்றிணைவதன் அவசியம், பெருகிவரும் கார்ப்பரேட் நுகர்வு கலாசாரம், பணிநீக்கம், தனியார் மயமாக்கல் குறித்து காத்திரமாக பேசியிருக்கிறார்.

‘ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் இருந்தது டிப்ரஷனாக இருந்தது. தற்போது வேலையே டிப்ரஷனாகிவிட்டது’, ‘மழை பெய்யுது, நின்னுட்டுப் போங்கனு சொன்ன குரலும், தலை துவட்ட துண்டு குடுத்த கையும் கண்டிப்பா ஒரு முதலாளியோடது இல்லனு தெரியும்’, ‘போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடட் போட்ருவாங்க போல’, ‘தண்ணீ விக்கிற விலைக்கு தண்ணீ கேக்குதா?’ போன்ற வசனங்கள் சமகால சூழலை பிரதிபலிக்கின்றன.

படத்தை முடிந்த அளவு எங்கேஜிங்காக கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். அதன்படி நகரும் படத்தின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, நுகர்வு கலாசாரத்தால் பலியாகும் எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் ஃப்ளாஷ்பேக் பகுதி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் இளைஞராக, மன அழுத்தத்தில் சிக்கிப் தவிப்பராக, கோபத்தை கட்டுபடுத்தி முகத்தில் உணர்ச்சிகளாக அதை வெளிப்படுத்தும் இடங்களில் தனது நடிப்பால் திருமேனி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். வில்லன் கதாபாத்திரத்துக்குள் சுருக்கப்பட்டிருந்த ஒருவரை சரியாக பயன்படுத்தி, தான் எழுதியிருக்கும் கதாபாத்திரத்துக்கு தகுந்த ஒருவரை பொருத்தியிருக்கிறார் வசந்தபாலன். அவரது கம்பீரமான குரலுடன் தொடங்கும் கவிதை ஈர்ப்பு.

அதேபோல இதுவரை மிடுக்கான உடல்மொழியுடன், துணிச்சலான பெண்ணாக வலம் வந்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் புதிதான கதாபாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். பதற்றத்துடனும், பயத்துடனும், குடும்பச் சூழ்நிலையை உணர்த்து பணியிடத்தில் தன் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை சகித்துகொண்டு வாழும் எளிய மக்களில் ஒருவராக துஷாரா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தென்காசி வட்டார வழக்கில் மொழியில் வேகத்தை கூட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் காளி வெங்கட். உண்மையில் தமிழ் சினிமா அவரை அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ஜுன் சிதம்பரம், சாரா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் கதாபாத்திர தேவையுணர்ந்து நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை பலம் சேர்த்த அளவுக்கு பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. நாயகியின் அறிமுகக் காட்சியில் வரும் பிஜிஎம் ரசிக்க வைக்கிறது. எட்வின் சாகே ஒளிப்பதிவு காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பை செய்கிறது. டான் அசோக், போனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகள் தனித்து தெரிகின்றன.

முதலாளித்துவத்துக்கு எதிரான கருத்துகளை பேசும் படம், பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி கதாபாத்திரத்தை எதிர்மறையாக சித்தரிப்பது நெருடல். அதேபோல அறந்தாங்கி நிஷாக்கான காட்சிகள் காமெடி என்ற பெயரில் எழுதப்பட்டிருப்பது, காவல் நிலையத்துக்குள் வந்து பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடுவது, அதற்கான ரியாக்சன்களின்றி அடுத்து நகரும் காட்சிகள், பணிப் பெண்ணான துஷாரா பணக்கார பெண் போன்ற உடை அலங்காரத்துடன் தோன்றும் அறிமுகக் காட்சியும், மாதச் சம்பளம் வாங்கி குடும்பத்தை நகர்த்தும் ஏழைப் பெண்ணான அவர், அவ்வளவு பெரிய வீட்டில் சாப்பாடில்லாமல் தினமும் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கமும் லாஜிக்காக இடிக்கவே செய்கிறது.

முதலாளித்துவ சுரண்டலை பேசும் படம் இறுதியில் ஆண் ‘நாயக’ தன்மைக்குள் சுருங்கிவிடுவதும், பெண்ணை குற்றவாளிக்கியாக்கி மன்னிப்பு கோர வைப்பதும் சிக்கல். மேலும் ஓசிடி எனப்படும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாமோ என தோன்றுகிறது. காரணம், சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட பார்வையாளர் தன்னுடைய பாதிப்பையொத்த ஒருவரை திரையில் கொலைகாரராகவும் பார்ப்பது அவருக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுடன், சமூகம் அவரை எப்படி அணுகும் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதேபோல பழிவாங்கும் ஹீரோயிச க்ளைமாக்ஸ் அயற்சி.

மொத்தமாக, முதலாளித்துவ சுரண்டல், நுகர்வு கலாசாரம் எளிய மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கும் ‘அநீதி’ பார்வையாளர்களுகு அநீதி இழைக்க வாய்ப்பில்லை என்றாலும், திரைக்கதைக்கு இன்னும் கூட நீதி தேவைப்படாமல் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x