Published : 10 Nov 2017 08:14 PM
Last Updated : 10 Nov 2017 08:14 PM
'மூன்று முகம்' படத்தை காப்பியடித்து 'மெர்சல்' உருவாக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டு அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மெர்சல்'. பல்வேறு சர்ச்சைகளை கடந்து, பெரும் வசூல் சாதனை செய்துள்ளது. நவம்பர் 9-ம் தேதி தெலுங்கில் வெளியாகியுள்ள 'அதிரந்தி'(மெர்சல் தெலுங்கு பதிப்பு) படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது 'மெர்சல்'
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விசாரித்த போது கூறியதாவது:
'மூன்று முகம்' படத்தின் ரீமேக் உரிமையை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர்கள் பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். தமிழ் - தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் இதனை ரீமேக் செய்வதற்கு, முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அட்லியின் முந்தைய 2 படங்கள் வெளியாகும் போது, 'மெளன ராகம்' - 'ராஜா ராணி', 'சத்ரியன்' - 'தெறி' என சர்ச்சை எழுந்தது. இவ்வாறு எழும் போது 'மெளன ராகம்' மற்றும் 'சத்ரியன்' உள்ளிட்ட படங்களின் ரீமேக் உரிமையை வைத்திருப்பவர்கள், மீண்டும் அப்படங்களை ரீமேக் செய்ய இயலாத சூழல் ஏற்படுகிறது.
அதே போன்றதொரு சூழல் 'மெர்சல்' படத்துக்கும் வந்துள்ளது. 'மூன்று முகம்' படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருப்பவர்கள், 'மெர்சல்' படத்தால் அதிர்ச்சியடைந்தார்கள். பெரும் விலை கொடுத்து மறுபதிப்பு உரிமையை வாங்கி வைத்திருப்பவர்கள், தற்போது என்ன செய்வது திகைத்திருக்கிறார்கள். 'அபூர்வ சகோதரர்கள்' பாணியில் படமிருந்தாலும், அதில் 'மூன்று முகம்' படச்சாயலும் இருந்ததை யாரும் மறுக்க இயலாது.
ஆகவே, ரீமேக் உரிமையை வைத்திருப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அட்லியின் மீது புகார் அளித்திருக்கிறார்கள். இப்புகாருக்கு விளக்கம் கேட்டு அட்லிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து, இப்பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT