Last Updated : 15 Nov, 2017 02:13 PM

 

Published : 15 Nov 2017 02:13 PM
Last Updated : 15 Nov 2017 02:13 PM

உள்ளே வெளியே 2 எடுக்கத் தயார்: தன் பாணிக் கவிதையில் பார்த்திபன் விளக்கம்

சமீபத்தில் பார்த்திபன் எழுதிய கவிதை இது. குறும்பும் குசும்புமாக, நக்கலும் கேலியுமாக, வார்த்தைகளில் வர்ணஜாலம் தீட்டிக் காட்டும் 'பார்த்திப’ ஸ்டைல்... இந்தக் கவிதையிலும்!

புதிய பாதையில் புதிதாய்ப் பிறந்தேன் என்றும் இப்போது 'உள்ளே வெளியே 2' எடுக்கத் தயார் நிலையில் இருக்கிறேன் என்றும் தயாரிப்பாளர்தான் சிக்கவில்லை என்றும் பாரதிராஜா தொடங்கி இன்று புதிதாய் வந்திருக்கும் டைரக்டர்கள் பலரும் இன்னும் நான் உச்சம் தொடவில்லை என்கிறார்கள். அதை அடைய தொடர்ந்து தேடுவேன். என்றெல்லாம் சொல்லும் பார்த்திபன், அறம் படத்தின் முக்கிய விஷயமான ஆழ்துளைக் கிணறு வார்த்தையையும் கவிதையில் செருகியிருக்கிறார். இன்று பார்த்திபன் பிறந்தநாள். வாழ்த்துகள் பார்த்திபன்!

ஆயிரம் அடிக்கும் அடியில்

ஆழ்துளை கலைக்கிணற்றில்

அகழ்வாய்வு கொண்ட

365 திங்களில்

அதிர்ஷடமெனும்

அபூர்வம் கண்டதில்லை நான்!

விதை புதைத்து

சுரை கொண்டதில்லை,

மரம் விதைத்தே

கனி உண்டிருக்கிறேன்.

பல்வேராய்ச்சியில்

பல்பு எரிந்தது போல...

பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்

நல் முத்துக்களாய்

கைதட்டல்கள் பெறுகிறேன்!

என் படங்களில் சூப்பர்

நட்சத்திரங்கள் நடித்ததில்லை

பிரம்மாண்ட இயக்குநர்களின்

படங்களில் நான் நடித்ததில்லை

இருப்பினும் இயங்குகிறேன்.

இருப்பை சிறப்பாய்

செதுக்கிய சமீபம் KTVI

பிறந்த நாளெனக்கு

14/4/1989(புதிய பாதை)! அடுத்த

பிறந்த நாளென்பது

'உள்ளே வெளியே 2'

வெளியீடும் வெற்றியும்!

தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.

தயாரிப்பாளர் தான்

முயற்'சிக்கவே' இல்லை!

என் இனிய பாரதி

ராசாவும் இசைய

ராசாவும் இன்றை

இளைஞ ராசாக்களும்

வருந்தி வாழ்த்துவது

"தகுதிக்கான உச்சம்

தொடவில்லை" என்பது.

எட்டாத ஸ்தூபம்

கிட்டாத ஸ்தானம்

அதற்கான ஸ்தூலம்

அறியவில்லை நானும்.

ஆனாலும் ஓடுகிறேன்

ஆறாமல் தேடுகிறேன்

அண்ணாந்து பார்க்கிறேநென்

விஸ்வரூப உழைப்பின் வியர்வை

சொட்டு சொட்டாய் நுனி

நாவை நனைக்க- உயிர்

கொள்ளும் சினிமா தாகம்

முன்பினும் மூர்க்கமாய்

மூச்சடக்கி பாய்கிறது.

வெற்றிக்கு உற்றோரே

உங்களின் வாழ்த்து

இன்றும் நாளையுமல்ல

இன்றியமையாதது என்றுமே

என்றறிவேன் நானும்

நன்றி'மறவேன்!!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x