Last Updated : 07 Apr, 2014 10:37 PM

 

Published : 07 Apr 2014 10:37 PM
Last Updated : 07 Apr 2014 10:37 PM

தாயும் நீயே என் தங்க இளமானே!

இசைஞானியின் பெயரைத் தாண்டி இப்படத்தை அடையாளம் கூற வேறு அம்சங்கள் கிடையாது. இளையாராஜாவின் 999வது படம் என்று மட்டும் போஸ்டர்களில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு தற்போது வெளியாகியுள்ள 'ஒரு ஊர்ல' எனும் படத்தை பற்றிய பதிவு தான் இது.

எப்போதும் சனி, ஞாயிறுகளில் ஜெஜெ என்று காணப்படும் சென்னை சைதாப்பேட்டை ராஜ் (பழைய 'நூர்ஜஹான்') திரையரங்கம் ஞாயிறு இரவு ஆள்நடமாட்டமின்றி இருந்தது. திரையரங்கிற்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள் திரையரங்கில் பணிபுரிபவர்களாகவே இருந்தனர். டிக்கெட் கொடுப்பவர், "சார்.. தெலுங்கு படம் இல்ல, இப்போ ஓடுற படம் 'ஒரு ஊர்ல' என்றார். அதற்கு தான் வந்திருக்கிறேன் எனக் கூறி இரண்டு டிக்கெட் வாங்கினேன்.

படம் போடுவீங்களா? என்று வினவிய போது பத்து பேர் தான் இருக்காங்க, பார்க்கலாம் என்றார், அவர். ஏசி போடுவீங்களா? என்றால் 'யாராவது வந்தாதானங்க போட முடியும்' என்றார்.

பத்து பத்திற்கு திரையரங்கினுள் சிகரெட் ஏதும் பிடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் திரையரங்க அதிகாரிகள் அனுப்பினர். அரங்கத்தில் நுழையப் பார்க்கையில் ஒரு நபர் பேச்சு கொடுக்கத் துவங்கினார். "நான் சினிமா கம்பெனியில் வேலைப் பார்ப்பவன் சார், அருமையான படம். படம் பார்த்தவுடனே தயாரிப்பாளருக்கு போன் பண்ணி சொல்லிட்டேன், 'கிளைமாக்ஸ் சூப்பர்ன்னு'"என்றார். அதற்குள் எங்கே படம் ஆரம்பித்து விடுமோ என்ற பதற்றம் என் மனதில்.

"படம் துவங்க இன்னும் பத்து நிமிஷம் இருக்கு"என்றார் அவர்.

"சேது படம் விநியோகஸ்தருக்காக திரையிட்ட போது பாதி பேர் இதெல்லாம் ஒரு படமான்னு படம் பார்க்கவே வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சேது முதல்ல அவ்வளவா ஓடல, ஏன் 'ஒரு தலை ராகம்' முதல் மூணு வாரத்துக்கு சுத்தமா ஓடவே இல்ல சார், கரகாட்டக்காரன் கூட முதல் ஒரு வாரம் ஓடவே இல்லை. அந்த வால மீனுக்கு பாட்டு வருமே.."

"'சித்திரம் பேசுதடி' சொல்றீங்களா?"

"ஆமாம் 'சித்திரம் பேசுதடி அது கூட முதல்ல ஓடல. ஏன் இளையராஜாவின் முதல் படம் 'அன்னக்கிளி' முதல் ஒரு வாரத்திற்கு ராஜகுமாரியில் ஈ ஓட்டிக்கிட்டு இருந்தது. அப்புறமா இந்த படம்லாம் பிக்கப்பாகி ஹிட் ஆகல?"என்று கேள்விகள் பல கேட்டு புள்ளியலை எடுத்து வைத்தார்.

படம் துவங்குவதற்கான மணி அப்போது அடிக்கப்பட்டது. "போங்க போங்க போய் படம் பாருங்க" என்று அவரே வழியனுப்பி வைத்தார்.

ஆரண்ய காண்டம், மௌன குரு திரைப்படங்களை முதல் வாரத்தில் காலியான திரையரங்கில் பார்த்து சிலாகித்த அனுபவங்கள் இருந்ததால் தயக்கங்கள் இன்றியே திரையரங்கிற்குள் சென்றேன். என்னையும், என் தந்தையும் தவிர அரங்கிற்குள் பத்து பேர். அதைத் தவிர, இருக்கையை சுற்றி சுற்றி வரும் கொசுக்கள். படம் துவங்கியது.

மலைகளில் ஒரு பயணம் செல்லும் பொழுது எப்போதும் கேமரா முன்னோக்கியே காட்டப்படும் அல்லவா? அதாவது சாலை போகும் திசையை தேடிச் செல்லும் ஒளிப்பதிவைத் தான் நாம் பொதுவாக திரைப்படங்களில் கண்டிருப்போம். அதிலிருந்து அக்கதை காரை ஓட்டும் நாயகனின் கதை என்பதை நாம் உணர்வோம். ஆனால் இப்படத்தின் முதல் காட்சியில் கேமரா பின்னோக்கிச் செல்கிறது. அதாவது கடந்த பாதையை அப்படியே காட்டிக் கொண்டே வருகிறது. இதன் மூலம் இது வாகனத்தின் முன் இருக்கையில் அமர்பவர்களின் கதையல்ல பின் இருக்கையில் பயணிக்கும் ஒரு குழந்தை பற்றிய கதை என்பதை அழகாக ஒரே ஷாட் உணரவைத்தது.

முதற் காட்சி படத்தை பற்றிய ஓர் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி, அப்பெரியவரின் வார்த்தையுடன் இணைந்து நம்பிக்கையினையும் வரவழைத்தது.

பொட்டல் காட்டில் ஒருவன் தனியே அமர்ந்து கொண்டு ஓ! என்று கதறுகிறான், நாயகனின் கதை சொல்லப்படுகிறது. தேரி என்ற கதாப்பாத்திரத்தில் குடிகாரராக வருபவர் தான் நாயகன். அன்பு காட்டிய அம்மா இறந்து போக, பற்றற்ற வாழ்க்கையை நாயகன் வாழ்ந்து வருகிறான். வீட்டிலும், வட்டாரத்திலும் ஒரு இழிபிறப்பாகவே காணப்படுகிறான். தேரியின் அண்ணன் அப்பாவாகிறார், வீட்டிற்கு குழைந்தையை பார்க்க வருபவர் அப்படியே உன் அம்மா தாண்டா உன் மதனி வயத்துல வந்து பொறந்திருக்கா என்று தேரியிடம் கூறுகிறார். முதலில் இதை காதில் போட்டுக்கொள்ளாமல் 'எங்க அம்மா மாதிரி ஒருத்தரை பெத்துக்க புண்ணியம் பண்ணனும் அதெல்லாம் இவங்களுக்கு கிடையாது' என்று தேரி கூற, 'போடா போய் பாரு' என்று கூறி அப்பெரியவர் விலகுகிறார்.

தன் அம்மாவின் படத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் நாயகனின் செவிகளில் அப்போது அப்பெரியவர் சொன்ன வார்த்தைகள் ரீங்காரம் இசைக்க குழந்தையை சென்று பார்க்கிறார். யாவராலும் வெறுக்கப்பட்ட அந்த மனிதனை பார்த்து அக்குழந்தை அழகாக சிரிக்கிறது. குழந்தைக்கு பெயர் சூட்டுகையில் தங்கச்சங்கிலி அணிவிக்கிறார் நாயகன், அப்போது அப்படியே குழந்தை சிரித்து அன்புடன் இவர் மீசையை தொடுகிறது. நாயகன் சிலிர்த்துப் போகும் அப்பொழுதில் நம் இசைராஜாவின் இசையும் இணைகிறது. தன் மீது அன்பு காட்டும் அக்குழந்தையில் அப்படியே தன் தாயை பார்க்கிறான் நாயகன். அர்த்தமற்ற தன் வாழ்க்கைக்கு ஒரு பொருள் வந்துவிட்டது என்பதை உணரும் இவர், இனி என் வாழ்க்கை இந்த குட்டீம்மாவிற்காகத் தான் என்று தன் வாழ்வையே அர்பணிக்கிறார். இங்கிருந்து படத்தின் மையக் கதை துவங்குகிறது.

தாய் மீது அளவற்ற அன்பு கொண்ட மகன்கள் தங்கள் வீட்டில் பிறக்கும் குட்டி தேவதையை தன் தாயின் அவதாரமாகவே பார்க்கின்றனர். அந்த அப்பழுக்கற்ற உணர்ச்சியை இப்படம் அழகாக பதிவு செய்திருந்தது. காதலி கிடைத்தபின் நாயகன் வாழ்வில் மாறுவதை பொதுவாக இப்போது எல்லாப் படங்களில் பார்க்கிறோம் அந்த வகையில் தன் அண்ணன் மகள் அன்பால் நல் வழியில் மாறும் ஓர் சித்தப்பனை பற்றிய கதை இது புதுரகம் தான்.

தேரி கதாப்பாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பும், அக் குழந்தையின் நடிப்பும் ஆத்மார்த்தமாக அமைந்துள்ளது. டப்பிங்கில் முக உணர்ச்சிக்கு மிகையாக சத்தத்தை பதிவு செய்திருப்பது, இருளோ என்றிருக்கும் லைட்டிங், பிற கதாபாத்திரங்களின் முகபாவங்கள், சரிகமபதநி என்ற ஸ்வரங்களையே ஜீவனற்று பின்னணியாக கொடுத்திருப்பது இவையாவும் படத்தின் குறைபாடுகள்.

சித்தப்பனுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் காட்சிகளில் இதுவரை சொல்லப்படாத பல உணர்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முக்கிய நிகழ்வுகளை தவிர இன்னபிற நிகழ்வுகள் வெகு சுமார் ரகமாக அமைதிருந்தது. நல்ல கதை, இதை இன்னும் நம்பிக்கையுடன் எடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

பொதுவாக கதை சொல்லப்படும் போது 'ஒரு ஊர்ல' எனும் வாசகம் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும் 'ஓர் ஊர்ல' எனும் தலைப்பில் வந்துள்ள இப்படம் வழக்கமான வட்டத்திற்குள் விழவில்லை.

சிகரங்கள் பல தொட்டும் இதைப் போன்ற நல்ல கதைக்களம் கொண்ட சிறிய பட்ஜெட் படத்திற்கு இசையமைத்த இளையராஜாவின் மேன்மையை பாராட்டாமல் செல்ல முடியுமோ!

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x