Published : 07 Nov 2017 07:11 PM
Last Updated : 07 Nov 2017 07:11 PM
'அறம்' படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள் என்று அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கோபி நயினார் பேசினார்
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அறம்'. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லருக்கு சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நவம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நயன்தாரா இன்றி மற்றவர்கள் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் இயக்குநர் கோபி நயினார் பேசியதாவது:
இப்படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த சில பிரச்சினைகளின் போது மிகப் பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிகையாளர்கள்தான். அவர்கள் எழுதிய செய்திகளைப் படித்து பலர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அதன் மூலம் தான் இந்த இப்படத்தை இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது உண்மை.
இயக்குனர் சற்குணம்தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.
கதை ஓகே ஆனபிறகு கூட இப்படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும், நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து படத்தை முடிக்க துணை நின்றார். இப்படத்தில் என்னைப் போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது. அதனால்தான் எல்லோரும் இதற்கான முன் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களைச் சேர்த்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, "நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன்" என்றார்.
இவ்வாறு கோபி நயினார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT