Published : 16 Nov 2017 04:08 PM
Last Updated : 16 Nov 2017 04:08 PM
சிம்பு, த்ரிஷா, வடிவேலு ஆகியோர் மீது தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளத்தால், தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
'அண்ணாதுரை' இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர் மற்றும் காமெடி ஜாம்பவான் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார் வந்திருப்பதாகவும், விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா பேசினார்.
ஞானவேல்ராஜா பேச்சைத் தொடர்ந்து, யார் அந்த நடிகர்கள் என்று சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஞானவேல்ராஜா பேச்சு குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது:
'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் நஷ்டத்தைத் தொடர்ந்து, சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் தெரிவித்திருக்கிறார். இதற்காக சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
மேலும், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்துக்காக வடிவேலு மீது தயாரிப்பாளர் ஷங்கர் புகார் கொடுத்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு போடப்பட்டுள்ள அரங்குகள் இதற்காக இருக்கிறது. இதனிடையே, வடிவேலுவும் படப்பிடிப்புக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். அவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
'சாமி 2' படத்திலிருந்து த்ரிஷா விலகலைத் தொடர்ந்து, அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அவருடைய விலகலைத் தொடர்ந்து, படத்தின் கதையைவே மாற்றக் கூடிய சூழலுக்கு படக்குழு தள்ளப்பட்டு இருக்கிறது. இதன் மீது தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டுள்ளோம்.
அவர்கள் விளக்கம் அளித்தவுடன், தயாரிப்பாளருடன் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்போம். தவறுகள் யார் மீதிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் தலைவர் விஷால் உறுதியாக இருக்கிறார். நடிகர் சங்கம் சார்பில் வரும் புகார்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டி நடவடிக்கை எடுக்க விஷால் அதிகாரம் வழங்கியிருக்கிறார். இப்பிரச்சினை குறித்த அடுத்த நடவடிக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT