Published : 20 Nov 2017 06:20 PM
Last Updated : 20 Nov 2017 06:20 PM

திரைப்பட இசையில் நான் பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லை: அனிருத்

திரைப்பட இசையில் மட்டும் நான் பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட இசையில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்று அனிருத் கூறினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னால், இதே நவம்பரில்தான் கொலவெறி பாடல் வெளியானது. அந்த பாடலுக்கு இசையமைத்த இளைஞன் இன்று மாபெரும் இசையமைப்பாளராக உச்சம் தொட்டு நிற்கிறார். அவர்… அனிருத்!

‘கொலவெறி - 6 ஆண்டுகள்’ குறித்தும், பாலிவுட் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு இசையமைப்பது பற்றியும், தன்னுடைய வெர்டிகிள் ஆல்பத்தின் சிறப்பம்சம் என்ன என்றும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார் அனிருத்.

‘’இரண்டு காரணங்களுக்காக ‘பேவஜா’ ஆல்பம் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, இதுதான் இந்தியாவின் முதல் வெர்டிகிள் பாப் ஆல்பம். என்னுடைய தனிப்பட்ட பாடல்களுக்காக கடந்த ஆண்டு சோனி மியூசிக் உடன் நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

அப்போது அவர்கள் வெர்டிகிள் ஆல்பம் என்னும் திட்டத்துடன் என்னை அணுகினர். முதலில் அதுகுறித்து எனக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் ஸ்டோரிபோர்டைக் காண்பித்தவுடன் அது குறித்துப் புரிந்துவிட்டது. இப்போது ஏராளமான மக்கள் மொபைலில்தான் வீடியோக்களைப் பார்க்கிறார்கள். அவர்களுக்காகத் தயாரானதுதான் ‘பேவஜா’ ஆல்பம்.

பாலிவுட்டில் படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்னால் ஓர் இசை ஆல்பத்தை வெளியிட ஆசைப்பட்டேன். அது ‘பேவஜா’ மூலம் நிறைவேறிவிட்டது.

இப்போது ட்விட்டரில் என்னை 40 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். சமூக வலைதளத்தில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததுண்டு. ‘கொலவெறி’ பாடலை நாங்கள் உருவாக்கியபோது, இத்தகைய வரவேற்பைப் பெறும் என்று எனக்குத் தெரியாது.

அந்த நாளில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதான் புதுமை படைக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.

திரைப்பட இசையில் மட்டும் நான் பரீட்சித்துப் பார்க்க விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட இசையில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்கிறேன். இணையத்தின் வருகையும், இசை செயலிகளும் அதற்கு உதவுகின்றன. இதனால் ரசிகர்களும் அதிகரித்துள்ளனர். அதற்கான வரவேற்பும் பல்கிப் பெருகியுள்ளது. இதனால் திருட்டும் தடுக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாணின் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கிறேன். 2018-ல் பாலிவுட் என்ட்ரி. தற்போது தமிழில் ‘வேலைக்காரன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகியவை கைவசம் இருக்கின்றன.

பள்ளிக் காலத்தில் மேடையேறுவதை அதிகம் ரசித்தவன் நான். ஆனால் திரையுலகில் கொஞ்சம் கூச்சப்பட்டேன். ஆனால் காலங்கள் ஓடின. மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.

ஏராளமானோர் ‘கொலவெறி’ பாடலைத் திரும்பக் கேட்பீர்களா என்று கேட்கிறார்கள். அதற்கான பதில் நிச்சயமாக இல்லை என்பதுதான். இப்போதுவரைக்கும் ஒரு பாடலை வெளியிடும் வரைதான் அதை ரசிப்பேன். வெளியீட்டுக்குப் பிறகு அடுத்தது என்ன என்ற தேடல்தான்’’ என்கிறார் அனிருத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x