Published : 15 Jul 2023 06:31 AM
Last Updated : 15 Jul 2023 06:31 AM
தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களின் தேவை இப்போது திடீரென அதிகரித்திருக்கிறது.
பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, உதவி இயக்குநர் ஆக வேண்டும் என்றால், ஏதாவது ஓர் இயக்குநரிடம் சேர்வதற்கே பெரும்பாடு பட வேண்டியிருக்கும். அது அவ்வளவு சுலபமும் இல்லை. மாதக் கணக்கில் அலுவலக வாசலில் காத்திருந்து, அவர்கள் கண்ணில் அடிக்கடி பட்டு, பிறகு‘ரொம்ப ஃபாலோ பண்றானே’ என கருணைகாட்டி சேர்த்துக்கொள்ளலாம். பிரபலங்களின் சிபாரிசில் உதவி இயக்குநர்கள் ஆனவர்களும் உண்டு. இப்போது சீனியர் இயக்குநர்களாக இருக்கும் பலருக்கும் இதுபோன்ற அனுபவம் அதிகம்.
காலம் மாற எல்லாம் மாறும் என்பது போல, இப்போது சினிமாவிலும் பல மாறுதல்கள். ஃபிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பிறகு படம் இயக்குவது சுலபம் என்றாகிவிட்டது. அதனால், உதவி இயக்குநராக சேர இப்போது யாரும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. டெக்னாலஜி வளர்ந்துவிட்டதால், குறும்படங்கள் இயக்கிவிட்டு, நேரடியாக படம் இயக்க வந்துவிடுகிறார்கள். இதற்கு கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உள்ளிட்ட சிலரை உதாரணமாகச் சொல்கிறார்கள்.
‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி, இதற்கு பெரும் உதவி செய்ய, அதில் பங்கேற்ற பலர் இன்று இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி நேரடியாக படம் இயக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடனடியாகத் தயாரிப்பாளர் கிடைக்காதவர்கள் மட்டுமே, உதவி இயக்குநராக சேர முன் வருகிறார்கள். வந்தாலும் ஒரே படத்துடன் எல்லாம் கற்றுவிட்டதாகத் தயாரிப்பாளரைத் தேடத் தொடங்கி விடுகிறார்கள்.
கொஞ்சம் வசதியானவர்களாக இருந்தால் அவர்களே தயாரித்து இயக்கவும் செய்கிறார்கள். அதோடு, கணக்கு வழக்கில்லாமல் விரயமாகும் தயாரிப்புச் செலவுகள், சொந்தமாகத் தயாரித்து இயக்க வரும் திறமையான பல உதவி இயக்குநர்களை பயம் கொள்ளவும் வைக்கிறது.
உதவி இயக்குநராக சேர, இன்று கம்ப்யூட்டர் அறிவு, வேர்ட்எக்ஸெல், போட்டோஷாப், டிசைனிங், வாகனம் ஓட்டுவது, தமிழ், ஆங்கிலம் தவிர பிறமொழி அறிவு, கூடவே அதிகம் உலக சினிமாவை பார்த்திருப்பதும் தேவையாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் உதவி இயக்குநர்களாகக் கிடைப்பது கடினமாக இருப்பதால் ‘உதவி இயக்குநர்கள் தேவை’ போஸ்டர்கள் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர், கோலிவுட்டில். பல இயக்குநர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். லைகாபோன்ற தயாரிப்பு நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது, தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்கள் தேவை அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது என்கிறார்கள்.
சமீபத்தில் இந்த அறிவிப்புகளை வெளியிட்ட இயக்குநர்களில் ஒருவர், லக்ஷ்மன். ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’, ‘பூமி’ படங்களை இயக்கியவர். அவரிடம் கேட்டோம்.
“நல்ல உதவி இயக்குநர்கள் கிடைக்கிறது இன்னைக்கு கஷ்டமாதான் இருக்கு. குறும்படம் எடுத்துட்டு நேரடியா சினிமாபண்ணலாம்னு நிறைய பேர் வர்றாங்க. அதை தப்புன்னு சொல்லலை. ஆனா, அவங்ககிட்ட அவசரம் இருக்குன்னு நினைக்கிறேன். சில உதவி இயக்குநர்களை கண்டு நானே மிரண்டிருக்கேன். ஒரு படத்தைப் பலமுறை பார்த்து, சினிமாவுல இருக்கிற 24 டிபார்ட்மென்டும் அதுல என்னென்ன வேலை பார்த்திருக்காங்கன்னு விரிவா பேசறாங்க, ஆச்சரியமா எழுதறாங்க. சினிமா எடுக்கறது பற்றி இன்னைக்கு ஆன்லைன்லயும் கத்துக்க முடியும். அதெல்லாம் டெக்னிக்கல் அறிவை வளர்த்துக்கத்தான். ஒரு கதையை சினிமாவுக்கு எப்படி மாற்றணுங்கற அறிவுக்கு, உதவி இயக்குநரா வேலைப் பார்க்கிறது நல்லது.
அதோட இன்னைக்கு உதவி இயக்குநர்களை டீல் பண்றதும் வித்தியாசமா இருக்கு. நான் உதவி இயக்குநரா இருக்கும்போது, கடைசி அசிஸ்டென்ட் வரை படத்தின் கதை தெரியும். இன்னைக்கு உதவி இயக்குநர்களுக்கு வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்திடறாங்க. ‘நீ காஸ்ட்யூம் ஏரியா பார்த்துக்கோ, நீ ஆர்ட் டிபார்ட்மென்ட் கவனிச்சுக்கோ’ன்னு கொடுத்திடறாங்க. இணை இயக்குநர் தவிர, மத்தவங்களுக்கு கதை கூட தெரியாது. அதனால ஸ்கிரிப்ட் அறிவு இல்லாம போயிரும். இதனாலயே பலர், நேரடியா படம் பண்ண போயிடறாங்கன்னு நினைக்கிறேன்” என்கிறார் லக்ஷ்மன்.
‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல் படம் இயக்கியவர். “ நான் உதவி இயக்குநரா பணியாற்றலைனாலும் ஒரு சேனல்ல வேலைபார்த்தப்ப, கேமரா பற்றி தெரிஞ்சுகிட்டேன். பிறகு விளம்பர படங்கள் இயக்கி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி ஓகே வாங்குறதுக்கும் விளம்பரப் படத்துக்கு ஓகே வாங்குறதுக்குமான போராட்டம் ஒன்னுதான். இந்த வாய்ப்புகள் எனக்கு கிடைச்சதால நான் படம் பண்ணினேன். அதே போல இன்னைக்கு உதவி இயக்குநர்களுக்கு வேலையை பிரிச்சுக் கொடுக்கிற நிலைமைதான் இருக்கு. டிசைனிங் தெரிஞ்ச உதவி இயக்குநர்னா, அவர்கிட்ட அந்த வேலையை மட்டும்தான் வாங்குவாங்க. அதனால எல்லாத்தையும் கத்துக்க முடியாது. நாமதான்ஆர்வத்தோட கத்துக்கணும், அப்படி கத்துக்க வேண்டிய நிலைமைதான் இருக்கு. அதனாலதான் டெக்னிக்கல் அறிவைவளர்த்துகிட்டு நேரடியா படம் பண்ண வந்திடறாங்க” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT