Published : 13 Jul 2023 09:02 PM
Last Updated : 13 Jul 2023 09:02 PM

இளையராஜாவுடன் இசையிரவு 33 | ‘அந்த நிலாவத்தான்’ - தொடுவானத்து நிலவைத் தொட்டுவிடச் செய்யும் ‘புல்லாங்குழல்’!

அல்காரிதத்திலும், ஏஐ-யிலும் கிடைக்காத ஏதோ ஒன்றுக்கு அன்று காதலென்று பெயர். பிடித்தமானவர்களின் இன்பாக்ஸுக்கு சென்று படத்துடன் பளிச்சென்று நினைத்ததைப் பதிவிட முடியாது இருந்த காலமது. இங்குதான் இருக்கிறது என்று இதுவரை துல்லியமாக கணிக்கப்படாத மனித மனங்களின் மெல்லிய சுவர்களில் ஈரத்தைச் சுரந்துக் கொண்டிருக்கும் இனம்புரியாத விருப்பத்தை அழகாக்கி புத்துணர்வுடன் வைத்துக் கொண்டே இருப்பதில் சினிமாவுக்கும், பாடல்களுக்கும் எப்போதும் பங்கு உண்டு. அதுவும் இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் உருவான பாடல்கள் என்றால், அந்தக் காதலே காதல் கொள்ளும் என்பதே நிதர்சனம்.

இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் வெளிவந்த பாடல்களைக் கேட்கும் பொழுதுகள் எல்லாமே பாடல் கேட்பவர்களுக்கு வானத்தை வசப்படுத்துபவை, வானவில்லின் நிறங்களை மனசுக்குள் அப்பிச் செல்பவை. இதற்குமுன் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் மூளையின் செரிபிரத்தை (cerebrum) அதிசயக்க வைப்பவை. இப்படி ராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகள் செய்த மாயங்களைப் பேசி தீராது.

மண் மணம் மாறாத அந்தக் கூட்டணியின் எத்தனையோ பாடல்களின் மெட்டுகளில் கிராமங்களும், கிராமத்து மனிதர்களின் காதலும் வாழ்வும் வழிந்தோடிக் கிடந்தன. இந்திப் பாடல்களை மறக்கடிக்கச் செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் இளையராஜா. அவர், வைரமுத்து போன்ற கவிஞர்களுடன் இணைந்து பணியாற்றிய பாடல்களின் மூலம் கிராமத்து மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்திருந்த வாய்மொழிப் பாடல்கள், வழக்காறுகள், சொல்லாடல்கள், சொலவடைகள் பலவும் சினிமாவுக்குள் வந்தன.

இவைகளின் நெருக்கமும், பிணைப்பும்தான் அதுவொரு சினிமா பாடல் என்கிற நிலையைக் கடந்து, அவை தங்களுக்கானது, தங்களைப் பற்றியது என்பதை உணரச் செய்தது. அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து இருவரும் பணியாற்றிய திரைப்படத்தில் முதல் மரியாதை இன்றளவும் மறக்கமுடியாத பேசப்படும் திரைப்படம். இந்தப்படத்தில் அனைத்து பாடல்களுமே, காலத்தை களவாடியவை. படத்தில் பெரும்பாலான பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார்.

"அந்த நெலவத்தான்" பாடலை மட்டும் இளையராஜா பாடியிருப்பார். ஆடுவதற்கு வேறு பாடலே கிடைக்காததுப் போல, இந்தப் பாடலை கிராம நகர பேதமின்றி மேடையேற்றி இதுவொரு பார்க்கவே கூடாத ஆபாச பாடல் போன்ற தோற்றத்தை உருவாக்கிய பெருமை தமிழகத்தில் உள்ள ஆடலும் பாடலும் குழுக்களையே சேரும். உண்மையில் அந்தப் பாடல் எளிய கிராமத்து காதலர்கள் பரஸ்பரம் கொஞ்சிக் கொள்ளும் அழகான ஒரு காதல் பாடல்.

இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியிருப்பார். குறிப்பாக இந்தப் பாடலில் கிராமத்து வழக்கை லாவகமாகக் கொண்டுவந்து பாடலில் கோர்த்திருப்பார். பாடலின் முதல் சரணத்தில் வரும் வரிகளில், "மல்லு வேட்டி கட்டி இருக்கு, அது மேல மஞ்ச என்ன ஒட்டியிருக்கு, முத்தழகி முத்தம் குடுக்க அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி" என்று எழுதியிருப்பார். இதே சரணத்தில், லவுக்கை என்ற சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார். ரவிக்கைதான், பேச்சு வழக்கில் லவுக்கை என்றழைக்கப்படும். காதலன் காதல் உரையாடலில் இந்தப் பதத்தை கனக்கச்சிதமாக பொருத்தியிருப்பார் வைரமுத்து.

அதேபோல், இரண்டாவது சரணத்தை, "ரத்தினமே முத்தம் வைக்கவா அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா வெக்கதையும் ஒத்தி வைக்கவா அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா" என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். பட்டணம், வக்கீல், மந்தை, பந்தியென்ற கிராமத்து மக்களின் தினசரி புழக்கத்தில் உள்ள சொற்கள் இந்தப் பாடலுக்கு அணிகலனாய் அமைந்திருக்கும்.

இந்தப் பாடலை இளையராஜாவுடன் இணைந்து சித்ரா பாடியிருப்பார். பாடலின் தொடக்க இசை மற்றும் சரணங்களின் இடையில் வரும் சந்திராயன் துணை இல்லாமல் நிலவுக்கு அழைத்துச் சென்றுவிடும். தொடுவானத்தில் தெரியும் நிலாவைப் பிடிக்க ஆசைபடும் கிராமத்து காதலர்கள் இரவில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல இப்பாடலுக்கான தொடக்க காட்சி அமைக்கப்பட்டிருக்கும். "அந்த நிலாவ தான்… நான் கையில புடிச்சேன்… என் ராசாவுக்காக" என்று சித்ரா பாடிமுடித்த கனத்தில், ஒரு புல்லாங்குழல் இசை வரும். ராத்திரி நேரத்தில் ரீங்கரிக்கும் வண்டுகளின் சத்தத்துக்கு இணையாக அது அமைக்கப்பட்டிரு்ககும்.

அதைத்தொடர்ந்து வரும் புல்லாங்குழல், வயலின், கிடார் உள்ளிட்ட ராஜாவின் இசைக் கருவிகள் தொடுவானத்து நிலாவை கைதொடும் தூரத்துக்கு கொண்டு வந்திருக்கும். தொடர்ந்து முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் வயலினும், செல்லோவும் செம்மண் உழுத வயல்வெளிகளின் சுவட்டை மனசுக்குள் கொண்டுவந்திருக்கும். அதேபோல், பருவம் வந்த காதலர்களின் விரசமான ப்ரியங்களை இச்சரணத்தின் இடையிசையில் வரும் புல்லாங்குழலும், வயலின்களும் மறைக்காமல் கடத்தியிருக்கும்.

அதேபோல், இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இடையிசையில் புல்லாங்குழல், வயலின், செல்லோ, சந்தூர் உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கொண்டு மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தி பேரானந்தத்தைத் தந்திருப்பார் இளையராஜா. ராஜாவின் ராஜகீதம் நீளும்.

அந்த நிலாவத்தான் பாடல் இணைப்பு இங்கே

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x