Published : 11 Jul 2023 03:16 PM
Last Updated : 11 Jul 2023 03:16 PM

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை

சென்னை: நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் இப்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நேற்றுடன் (ஜூலை 10) முடிவடைந்தது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், விஜய் நடிக்க இருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த மாதம் உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.

கடந்த மாதம், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார். மற்றும் அவர் பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவதற்காக நடிகர் விஜய் பனையூர் வந்தடைந்தார். அவருக்கு மக்கள் இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை கொண்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் திண்டுக்கல் தேனி, சேலம், கிருஷ்ணகிரி ஒசூர், விருதுநகர், சிவகங்கை, திருச்சி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அணி தலைவர்கள் என 300 பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டம் மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. செல்போன், பேனா எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x