Published : 10 Jul 2023 07:09 AM
Last Updated : 10 Jul 2023 07:09 AM

திரை விமர்சனம்: காடப்புறா கலைக்குழு

ஒரு தெற்கத்தி கிராமம். அங்கே 2 கிராமியக் கலைக் குழுக்கள். காடப்புறா கலைக்குழுவை நடத்தி வரும் பாவாடைசாமி (முனீஷ்காந்த்), தன் குழுவின் கலைஞர்களை குடும்பமாகப் பாவிக்கிறார். அவர் தமிழை (ஹரிகிருஷ்ணன்), தத்துப்பிள்ளைபோல் வளர்க்கிறார். தமிழ், மற்றொரு கலைக்குழுவை நடத்தும் பென்சில் மீசை பெருமாளின் (சூப்பர்குட் சுப்ரமணி) தங்கை கலையரசியைக் (சுவாதி) காதலிக்கிறார். பாவாடை சாமிக்கும் பெருமாளுக்கும் தொழில் ரீதியான முரண்பாடுகள் இருப்பதால், காதலை ஒளித்தே வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் ஈஸ்வரமூர்த்தியை (மைம் கோபி) எதிர்த்துக் களம் காணும் சரவணனை ஆதரிக்கிறார் பாவாடைசாமி. தேர்தலில் வெற்றி பெற்றது யார்? கிராமியக் கலைகளைப் புறக்கணிக்கும் ஈஸ்வரமூர்த்தியால், காடப்புறா கலைக்குழுவுக்கு என்ன நேர்ந்தது? தமிழ்
– கலையரசி காதல் கைகூடியதா என்ற கேள்விக்கு விடை சொல்கிறது கதை.

நடனம், கரகம் என கிராமிய ஆட்டம் எதுவானாலும் அதில் ஆபாசம் சேர்க்கமாட்டோம், கலைக்குழுவில் உள்ள பெண் கலைஞர்களை யாரும் தொடக்கூடாது என்பன உட்பட பாவாடைசாமி விதிக்கும் நிபந்தனைகள், அசலான கிராமியக் கலைஞர்கள் விரும்பும் சுயமரியாதையை பளிச்சென்று எடுத்துக்காட்டுகிறது. எதிர்தரப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பென்சில் மீசை பெருமாள், பாவாடைசாமி எதிர்பாராத வகையில் பகையைச் சம்பாதித்துகொள்ளும் பஞ்சாயத்துத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகிய கதாபாத்திரங்கள் வழக்கமான சட்டக வார்ப்புகள்.

நிகழ்த்துக் கலைகள் பிரிவை எடுத்து, அதில் முதுகலைப் பயிலும் வளர்ப்பு மகன் தமிழ் கதாபாத்திரம், நவீன உலகில் கிராமியக் கலையை எந்த உயரத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்பதையும் தகுதியான ஒருவருக்கு கொடுக்கப்படாத அங்கீகாரத்தை, எடுத்துக்கூறி பெற்று விடலாம் என்பதையும் சாதித்துக் காட்டுவது திரைக்கதை நாடகத்துக்கு வலுவாகக் கைகொடுத்திருக்கிறது.

முனீஷ்காந்தின் நகைச்சுவை பல காட்சிகளில் எடுபடவில்லை. குணச்சித்திர காட்சிகளில் நடிப்பால் ஈர்த்துவிடுகிறார். காளி வெங்கட் தனது கதாபாத்திரம் குறைவாக இருந்தாலும் நடிப்பால் அதை நிறைத்து விடுகிறார். மைம்கோபி, வில்லன் வேலையை சரியாகச் செய்திருக்கிறார். ஆத்தங்குடி இளையராஜா, அளவாக நடித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். தமிழாக வரும் ஹரிகிருஷ்ணனும் கலையரசியாக வரும் சுவாதியும் கிராமிய இயல்புடன் வசீகரிக்கிறார்கள். பாடல் காட்சிகளைத் தவிர, வேறு காட்சிகளில் கிராமியக் கலைகள் பயன்படுத்தப்படாதது பெருங்குறை. அதைப் பின்னணி இசையால் ஈடுசெய்திருக்கிறார் ஹென்ரி.

ஒருவரிக் கதையைத் தேர்வு செய்தபின், அதற்குள் கிளைக் கதைகளின் எண்ணிக்கையை தேவையின்றி அதிகப்
படுத்துவது திரைக்கதையின் சீரான ஓட்டத்துக்குத் தடையாகிவிடும். அந்தச் சிக்கல் காடப்புறாவுக்கும் நேர்ந்திருக்
கிறது. அதைத் தாண்டி, கிராமியக் கலைகளின் நிலையைப் பேசுவதால் ஈர்க்கிறது இக் கலைக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x