Published : 23 Jun 2023 09:13 AM
Last Updated : 23 Jun 2023 09:13 AM
தன்னுடைய இழப்புக்கு தானே களமிறங்கி குற்றவாளிகளை களையெடுக்கும் ஒரு பெண்ணின் போராட்டம் தான் ‘ரெஜினா’.
வங்கி ஒன்றில் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கும் ஜோ (ஆனந்த் நாக்) கொள்ளையர்கள் சிலரால் கொடூரமாக கொல்லப்படுகிறார். ஏற்கெனவே பல்வேறு இழப்புகளை சந்தித்து வாழ்வில் துணையற்று விரக்தியிலிருக்கும் ரெஜினாவுக்கு (சுனைனா) தன்னுடைய காதல் கணவர் ஜோ-வின் இழப்பு முற்றிலும் முடக்கிவிடுகிறது.
கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காவல்நிலைய படியேறும் ரெஜினாவுக்கு காவல்துறையின் கதவுகள் அடைக்கப்படுகின்றன. இனியும் சட்டத்தை நம்ப முடியாது என முடிவு செய்து கொலைக் குற்றவாளிகளை பழிதீர்க்க தானே நேரடியாக களமிறங்கி திட்டம் தீட்டுகிறார். பழிதீர்க்கும் படலத்தில் ரெஜினா வெற்றி கண்டரா? இல்லையா? கொலைக்கு பின்னாலிருக்கும் மர்மங்கள் என்ன? என்பது மீதிக்கதை.
பழிவாங்கும் கதையை த்ரில்லர் திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என்ற இயக்குநர் டொமின் டி செல்வாவின் போராட்டம் புரிகிறது. ஆனால், அந்தப் போராட்டத்துக்காக பார்வையாளர்களை பலிகொடுப்பதன் நோக்கம் தான் புரியவில்லை. படத்தின் ஆரம்பத்தில் சிறையிலிருக்கும் பவா செல்லதுரை அடித்து அவரை நக்சலைட் என அடையாளப்படுத்துகின்றனர்.
அதற்கான தேவையை படம் முடிந்து வெளியே வந்து ‘டீ’ குடிக்கும்போதும் கூட அறிந்துகொள்ள முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணாக சுனைனாவின் கஷ்டங்களை அடுக்க இயக்குநர் மிகவும் கஷ்டப்பட்ட போதிலும் எந்த கனெக்ட்டும் எடுபடவில்லை. காரணம், சுனைனாவின் கணவர் மற்றும் தந்தை இரண்டு கதாபாத்திரங்களின் இறப்பும் சடங்கு போல நடந்து முடிந்துவிடுகிறது. அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றுவதற்கான ஒரு காட்சியுமில்லாததால், அவர்களின் இறப்பு அந்நியமாக தோன்றுகிறது. இதனால் சுனைனாவின் பரிவைக்கோரும் முதல் பாதி சரிவை சந்திக்க, சம்பந்தமேயில்லாமல் அடுத்தடுத்து ஜம்ப் ஆகும் காட்சிகள் ஆதிகால திரைக்கதையை நினைவூட்டுகிறது.
ப்ரேக் பிடிக்காத வாகனத்தைப்போல, இலக்கின்றி செல்லும் இரண்டாம் பாதியில் சீனுக்கு ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டும் பயனில்லை. பெண் மைய கதாபாத்திரத்தின் வழியே நகரும் கதைக்கு மீட்பராக ஆண் ஒருவர் உடன் இருக்கிறார். எதிரிகளின் கூட்டத்துக்குள் பாதுகாப்பாக சுனைனாவை அழைத்துச் சென்று அவர் கையில் துப்பாக்கியை கொடுத்து சுடச்சொல்வது அதற்கு பெரும் உதாரணம். பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு பாதுக்காப்பாக ஆணை நிறுத்தி, வெறும் துப்பாக்கியால் ட்ரிகரை அழுத்துவது மட்டுமே வேலை என்பது போல மொத்தபடமும் அதன் நோக்கத்திலிருந்து தடுமாறியிருக்கிறது. படத்தில் டப்பிங் பெரும் பிரச்சினை. குறிப்பாக சுனைனா ஆங்கில சாயலில் தமிழை உச்சரிப்பது துருத்தல்.
தொடர் இழப்புகளால் துவண்டு நிற்கும் இடத்திலும், அதிலிருந்து மீண்டு வில்லத்தனத்தை காட்டும் காட்சிகளிலும் சுனைனாவின் நடிப்பு தனித்து தெரிகிறது. மொத்த படத்தையும் ஒரே ஆளாக இழுத்து செல்வதால் முடிந்த அளவுக்கு உழைப்பு செலுத்துகிறார். இயக்குநரும் தோள் கொடுத்திருந்தால் கதாபாத்திரம் நேர்த்தி கொடுத்திருக்கும். நிவாஸ் ஆதிதன் நடிப்பு கவனம் பெறுகிறது. பவாசெல்லதுரை, விவேக் பிரசன்னா கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டுள்ளது. கஜராஜ், சாய் தீனா நடிப்பில் நியாயம் சேர்க்க ஜூலி நடிக்க முயன்றிருக்கிறார். சதீஷ் நாயரின் பின்னணி இசை கைகொடுக்கும் அளவுக்கு பாடல்கள் நினைவில் நிற்கவில்லை. அதேபோல தேவையற்ற பாடல்கள் கதையோட்டதுக்கு கைகொடுக்காமல் துருத்திக்கொண்டு நிற்பது அயற்சி. பவி கே பவன் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.
‘எதாவது தப்பா போச்சுன்னா ஏஞ்சல்ஸ் டீமன்ஸ் ஆயிடுவாங்க’ எனப் படத்தில் வரும் வசனத்தை பார்வையாளர்களை வைத்து யோசித்து பார்த்திருக்கலாம். மொத்தத்தில் பழிவாங்கும் திரைக்கதை கொண்ட இந்தப்படம் எதிரிகளை பழிவாங்காமல்.....................
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT