Last Updated : 21 Oct, 2017 05:32 PM

 

Published : 21 Oct 2017 05:32 PM
Last Updated : 21 Oct 2017 05:32 PM

மெர்சல் காட்சியை நீக்கச் சொல்வது ஜனநாயக முறைப்படி தவறு: தயாரிப்பாளர் சங்கம்

'மெர்சல்' காட்சியை நீக்கச் சொல்வது ஜனநாயக முறைப்படி தவறு என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்த சர்ச்சைத் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளிவந்துள்ள 'மெர்சல்' திரைப்படம் தொடர்பாக பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களிலும், தேசிய அளவிலும் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரு திரைப்படம் கற்பனைக் கதையாக வரும் போதே, அக்கதைச் சார்ந்த DISCLAIMER போடப்படுகிறது. அதுமட்டுமன்றி, மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை குழுவால் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லாத ஒரு படம் என்று சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்தச் சான்றிதழை முன்வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அச்சான்றிதழ் வாங்கும் பணிகள் எவ்வளவு கடினமானது என்பதை அதே படத்தின் மூலமாகவே மக்களுக்கு தெரியவந்ததுள்ளது.

இவ்வளவு விஷயங்களைத் தாண்டி, பல கோடி ரூபாய் முதலீடு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் கடின உழைப்போடு ஒரு படத்தை தயாரித்து வெளியிடுகிறோம். அப்படத்தின் தணிக்கை முடிந்த பிறகும், காட்சியை நீக்க வேண்டும் என்பது ஜனநாயக முறைப்படி தவறான விஷயமாகும். இதனை தயாரிப்பாளர் சங்கம் ஒரு போதும் ஆதரிக்காது.

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பலருக்கும் பலவிதமான கருத்துகள் எழலாம். அக்கருத்துக்களை பகிர்வதோடு இருக்கலாமே தவிர, தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை நீக்கச் சொல்வது தவறு.

தணிக்கை சான்றிதழ் செய்யப்பட்ட படத்தை, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வற்புறுத்தலுக்காக மீண்டும் தணிக்கை செய்வது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x