Last Updated : 19 Oct, 2017 10:48 AM

 

Published : 19 Oct 2017 10:48 AM
Last Updated : 19 Oct 2017 10:48 AM

முதல் நாள் முதல் பார்வை: மெர்சல் - ரசிக்கக் கூடியவன்!

தந்தையைக் கொன்றவனை பழிவாங்கும் மகன் கதைக்குள், மருத்துவ துறைக்குள் நடக்கும் அநியாயங்களைக் கூறியிருக்கும் கதையே 'மெர்சல்'

முதல் காட்சியிலேயே சென்னையில் மருத்துவத்துறையைச் சார்ந்த சிலர் கடத்தப்படுகிறார்கள். 5 ரூபாய்க்கு மருத்துவம் செய்யும் மருத்துவராகவும், மேஜிக் கலை நிபுணராகவும் இருக்கிறார் விஜய். அவர் தான் அனைவரையும் கடத்தியிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்கிறது காவல்துறை. ஏன் கடத்தினார், அவர் மேஜிக் கலை நிபுணரா, மருத்துவரா என்பதை பிரம்மாண்டமாக கூறியிருக்கும் படமே 'மெர்சல்'

மேஜிக் நிபுணர், மருத்துவர் மற்றும் கிராமத்து இளைஞர் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டி பார்ப்பவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறார் விஜய். ஏற்கனவே பல படங்களில் பார்த்த பழைய கதை என்றாலும், இவருடைய நடிப்பால் மெர்சலை ரசிக்க முடிகிறது. அமைதி, ஆக்ரோஷம், பழி வாங்கல் என அனைத்தையுமே திரையில் அழகாக பிரதிபலித்திருக்கிறார் விஜய். ப்ளாஷ்பேக் காட்சியில் வரும் தளபதி கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார்கள். அதில் வெள்ளை முடி, முறுக்கு மீசை என கிராமத்து இளைஞனாக விஜய் காட்டியிருக்கும் வெரைட்டிக்கு திரையரங்குகளில் அப்ளாஸ் அள்ளுகிறது.

3 நாயகிகளில் நித்யா மேனனுக்கு மட்டுமே வலுவான கதாபாத்திரம். கணவருக்காக உருகுவது, அவர் லட்சியத்துக்காக தாலியைக் கழற்றிக் கொடுப்பது என அருமையாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் மற்றும் சமந்தா இருவருமே சில காட்சிகளுக்கும், பாடல் காட்சிகளுக்கும் மட்டுமே உதவியிருக்கிறார்கள். சென்னை மொழியில் சமந்தா பேசும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் ரசிக்க முடிகிறது.

டேனியல் என்ற வில்லனாக எஸ்.ஜே.சூர்யா. ப்ளாஷ்பேக் காட்சிகளில் "தற்போது சிசேரியன் என்றால் ஆச்சரியப்படுவார்கள், இன்னும் 30 ஆண்டுகள் கழித்து நார்மல் டெலிவரி என்றால் ஆச்சரியப்படுவார்கள்" என்று வசனம் பேசும் காட்சியில் மிரட்டியிருக்கிறார். அப்பா விஜய்யைக் கொல்வது, மகன் விஜய்யைப் பார்த்து மிரள்வது என நடித்திருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக்கி இருக்கலாம். வடிவேலு, கோவை சரளா, யோகிபாபு என பலர் இருந்தாலும், படத்தில் பெரிய வேலை இல்லை. காளி வெங்கட் சிறுகதாபாத்திரம் என்றாலும் கச்சிதம்.

'அபூர்வ சகோதரர்கள்', 'ரமணா', 'சிவாஜி' என பல படங்களின் சாயல் இருந்தாலும், அதை எப்படி மக்கள் ரசிக்கும் வகையில் சொல்வது என்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் அட்லி. நித்யா மேனனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் போது, விஜய் தன் மகனிடம் கதை சொல்லும் காட்சி அற்புதம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் மட்டுமன்றி வசனங்களிலும் ரமணகிரிவாசனோடு இணைந்து மருத்துவத்துறையின் அநியாயங்களை விளாசியிருக்கிறார் அட்லி.

"மனிதாபிமானம்ங்கறது ஸ்பெஷல் குவாலிட்டி இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி", "7% ஜிஎஸ்டி வரி வாங்குகிற சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம், 18% ஜிஎஸ்டி வரி வாங்குற இந்தியாவில் மருத்துவம் இலவசமில்லை", "நான் பேசுற பாஷையும் போட்டிருக்க டிரஸ்ஸும் தான் உங்க பிராப்ளம்ன்னா, மாற வேண்டியது நான் இல்ல, நீங்க தான்", "எப்பலாம். நாம பெரிய ஆள் என்ற தலைக்கனம் வருதோ, அப்பவெல்லாம் ஏர்போர்ட் வந்தால் நாம் ஒரு சாதாரண ஆள் என்று செக்கிங்கில் சொல்லிடுவாங்க. இந்த உண்மையை நான் சொல்லல. ஷாருக்கான் சொல்லிருக்கார்" என்று வசனங்களை ரொம்ப கூர்மையாக எழுதியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. ஜி.கே.விஷ்ணுவுக்கு இது முதல் படமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்தியிருக்கிறார். மேஜிக் நிபுணர், மருத்துவர், கிராமத்து இளைஞர் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒளிப்பதிவில் இவர் காட்டியிருக்கும் வித்தியாசம் ரசிக்க முடிகிறது. 'ஆளப்போறான் தமிழன்' பாடல், கிராமத்து விழாவில் நடக்கும் விபத்து, மேஜிக் காட்சிகள் என பிரம்மாண்டத்தை கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஆளப்போறான் தமிழன்' மட்டுமே படத்தோடு ஒன்றியிருக்கிறது. மற்ற பாடல்களை நீக்கிவிட்டாலும், கதையில் எந்தவொரு மாற்றமுமே நிகழாது. பின்னணி இசையில் இது ஏ.ஆர்.ரஹ்மானா என்ற கேள்வி எழுகிறது. படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் யூகிப்பது போல் இருப்பது ஒரு மைனஸ். மேலும், படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். இடைவேளை வரை உள்ள காட்சிகள் அனைத்துமே மேலோட்டமாக இருக்கின்றன.

தளபதி கதாபாத்திரம் அறிமுகமானவுடன் தான் படத்தின் கதை சூடுபிடிக்கிறது. வடிவேலுவுக்கு எப்படி இரண்டு விஜய்யையும் தெரியும், கோவை சரளா யார், பஞ்சாபி பெண் நித்யா மேனன் எப்படி தமிழ் பேசுகிறார் என பல கேள்விகள் எழுந்தாலும், அதனைத் தனது பிரம்மாண்ட மேஜிக் மூலம் மறைத்து விடுகிறார் அட்லி.

பல படங்களின் சாயல் தெரிந்தாலும், விஜய்யின் நடிப்பு, பிரம்மாண்டம் என்பது அனைத்தையும் மறக்கடித்து ரசிக்க வைக்கிறது இந்த 'மெர்சல்'.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x