Published : 27 Oct 2017 04:58 PM
Last Updated : 27 Oct 2017 04:58 PM
தென்னிந்திய திரையுலகம் குறித்து இந்தி பிக் பாஸ் போட்டியாளரின் சர்ச்சையான கருத்துகள் குறித்து குஷ்புவும் ஹன்சிகாவும் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.
சல்மான்கான் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் 11-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதன் போட்டியாளர்களில் ஒருவரான ஹினா, சக போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, "தென்னிந்திய இயக்குநர்கள் தங்கள் படங்களின் கதாநாயகிகள் சற்றே பருமனான தேகத்துடன் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். எனக்கு தென்னிந்திய சினிமா இயக்குநரிடமிருந்து இரண்டு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், எனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார்.
எடையை அதிகரிக்க விரும்பாததால் நான் அந்த பட வாய்ப்புகளை நிராகரித்துவிட்டேன். ஆனால், வெங்கடேஷ் - மகேஷ்பாபு கூட்டணியில் உருவான அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. பின்னாளில் அந்த பட வாய்ப்பை நழுவவிட்டதற்காக வருந்தினேன்" என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு, சமூகவலைதளத்தில் பகிரப்பட்டதால் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹினாவின் கருத்துகள் குறித்து குஷ்பு, "எப்படி கண்ணியத்துடன் நடந்து கொள்வது என தென்னக்கத்திலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் அவர்கள் அதே நிலையிலும், நம் பெண்கள் அவர்களைத் தாண்டியும் வளர்ச்சியடைந்து வருகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஹினாவின் கருத்துகள் குறித்து ஹன்சிகா, "இவர் என்னதான் சொல்ல வருகிறார்? எப்படி தென்னிந்திய சினிமாவை இப்படி அவதூறாகப் பேசலாம்? அவர் சொல்வது முட்டாள்தனமானது. ஏன், பல பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய சினிமாவில் வேலை செய்வதும், செய்து கொண்டிருப்பதும் அவருக்குத் தெரியாதா? ஹினா கான், இப்படி எங்களை தரம் தாழ்த்தி பேசியது உங்களுக்குத் தான் அவமானம்." என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT