Published : 31 Oct 2017 06:42 PM
Last Updated : 31 Oct 2017 06:42 PM
தமிழகத்தில் 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்துகிறார்கள் என்று '6 அத்தியாயம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பார்த்திபன் பேசினார்.
அமானுஷ்யம் என்பதை மட்டும் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி இருக்கிறார்கள். '6 அத்தியாயம்' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர்கள் கேபிள் சங்கர், அஜயன் பாலா, தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் என 6 பேர் 6 அத்தியாயங்களை இயக்கியுள்ளார்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பார்த்திபன், சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் பேசியதாவது:
மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை.
6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவைப் பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன்.
தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT