Last Updated : 08 Oct, 2017 07:54 PM

 

Published : 08 Oct 2017 07:54 PM
Last Updated : 08 Oct 2017 07:54 PM

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரை பொறிக்க நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம்

சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரை பொறிக்க வேண்டும் என நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் 64-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து நாடக நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

செவாலியே சிவாஜி கணேசன் அரங்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ மற்றும் மறைந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத் தலைவர் கருணாஸ் ஆண்டறிக்கை வாசித்தார், பொருளாளர் கார்த்தி நடிகர் சங்கத்தின் வருங்காலப் பொருளாதார நிகழ்வுகளை முன்வைத்தார்.

நடிகர் சங்கப் பொதுக்குழுவில் விஷால் பேசிய போது, "கட்டிடம் வந்தவுடன் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளேன். ஆகையால் மட்டுமே கார்த்தியின் முன்பு பட்டு வேஷ்டி சட்டையில் தினமும் நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தி, வாசலில் நானும் நிற்கிறோம்.

எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியோ, சிவாஜி ஆவியோ கட்டிட நிலத்தில் புகுந்துவிட்டது. கட்டிடம் கட்ட முடியும் வரை போகாது. மறுபடியும் வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா. வா என்று நேர்மையுடன் நிற்கிறோம். என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முதலில் பொதுச் செயலாளராக வருவேன் என்று தெரியாது.

மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன். ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்ஜிஆர் சமாதியைப் பார்த்துவிட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை.

தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தச் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால்தான் தமிழ் சினிமா நிலைக்கும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ் சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் செயல்படவே முடியாது

இவ்வாறு விஷால் பேசினார்.

அதனைத் தொடர்ந்து விஷால் வாசித்த தீர்மானங்களில், "சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சிவாஜி சிலையிலிருந்து கருணாநிதிபெயரை நீக்கியுள்ளனர். அவரும் நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர். ஆகவே திரையுலகம்  சார்பில் அவருடைய பெயரைச் சேர்க்க வேண்டும்" என்பது ஒன்றாகும். இதற்கு அனைவருமே ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், "இந்த நடிகர் சங்க நிர்வாகிகளால் எந்தவித அரசியல் மாற்றத்தை கொண்டுவர முடியும். ஏனென்றால் 8 மணி நேரத்தில் நடிகர் சங்க வளாகத்தில் குளிர் சாதன அரங்கம் எழுப்பி பொதுக்குழு நடத்தினோம். எங்களுக்கு எதிரிகள் கிடையாது. எதிர்ப்பவர்கள்தான் இருக்கிறார்கள். எவ்வித பிரச்சினையுமின்றி பொதுக்குழு நடைபெற்றதில் சந்தோஷம்" என்று பேசினார்.

இப்பொதுக்குழுவில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. மேலும், நடிகர் சங்க நிதிக்காக 2018-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்த தீர்மானித்துள்ளது நடிகர் சங்கம். இதில் கலந்து கொள்ள ரஜினி மற்றும் கமல் இருவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x