Published : 13 Jun 2023 06:22 PM
Last Updated : 13 Jun 2023 06:22 PM

பிறை தேடும் இரவிலே... - இதமூட்டும் ஜி.வி.பிரகாஷின் 10 மெலடி பாடல்கள்!

திரைப்பட இசையமைப்பாளர்களை வெகுசன மக்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பது பாடல்கள்தான். அதுவும் காதல் களவாடிய பொழுதுகளை கருமேகக் கூட்டங்கள் கலைத்து மழைத்தூவச் செய்யும் கடந்தகால நினைவுகளை மீட்டுத்தரும் மெலோடி பாடல்களுக்கு எப்போதும் ரசித்துக் கொண்டாடப்படும். அந்த வகையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகமான திரைப்படத்தில் இருந்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் "மாடர்ன் லவ் : சென்னை" தனது மெலோடி பாடல்களால் அக்கம்பக்கம் யாருமற்ற நேரங்களில் ரசிகர்களின் மனதுக்குள் பூக்கள் பூக்கும் தருணத்தை கொண்டு வந்திருப்பார் ஜி.வி.பிரகாஷின் இசையில் வந்த பத்து ஆல்டைம் பேஃவரைட் பாடல்களின் வரிசை இது...

அக்கம் பக்கம் யாருமில்லா: கிரீடம் திரைப்படத்தில் சாதனா சர்கம் குரலில் வந்த மிருதுவான காதல் மெலோடி இந்தப் பாடல். "என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே…என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே…
வேறென்ன வேண்டும் உலகத்திலே…
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்" என்ற கவிஞர் நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ஏற்ப, ஜி.வி.பிரகாஷின் இசை, ஏழேழு ஜென்மத்துக்கு நெஞ்சுக்குள் இன்பத்தை தந்திருக்கும். பாடலில் வரும் மென்மையான இசை இப்பாடல் கேட்கும் போதெல்லாம் மனதுக்குள் மெலிதான புன்னகை ஒன்றை பூக்கச் செய்திருக்கும்.

உன் பேரைச் சொல்லும்போதே: அங்காடித் தெரு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த இப்பாடலை நரேஷ் ஐயருடன் இணைந்து ஷ்ரேயா கோஷல் பாடியிருப்பார். வறுமையும் கடனும் கதவடைத்துக் கொண்ட வாழ்க்கையில் அங்காடித் தெருவின் விசாலமான கடைகளுக்குள் வாழும் எண்ணற்ற இளம் தொழிலாளர்களின் மனதுக்குள் மடித்து வைக்கப்பட்ட காதலை சொன்ன பாடல் இது. இப்பாடலில் ஷ்ரேயா கோஷலின் மனதை உருக்கும் குரலில் இபப்பாடல் கேட்பதற்கு அத்தனை சுகமானதாக இருக்கும்.

பூக்கள் பூக்கும் தருணம்: மதராஸப்பட்டினம் பலருக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தந்த படம். 2000க்குப் பிறகு, சுதந்திரப் போராட்டக் காலத்து நினைவுகளையும் காதலையும் திரையில் கொண்டுவந்த திரைப்படம். கதையோட்டத்துக்கு தேவையான இடங்களில் வரும் அத்தனை பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. அதிலும் ஆளும் வர்க்கத்து நாயகிக்கும் அடிமை வம்சத்து நாயகனுக்கும் இடையே பூக்கும் காதலை, இந்தப் பாடல் அருகில் சென்று உணரச் செய்திருந்தது. அதிலும் இந்தியன் கிளாசிக்ல் கஸல் ஸ்டைல் ஓப்பனிங் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கும் தன்மை கொண்டது.

அய்யய்யோ நெஞ்சு: ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் வந்த இப்பாடல் இளைஞர்கள் பலருக்கு தெளியவைத்து தெளியவைத்து மயக்கம் தரும் பாடல்களில் ஒன்று. வெள்ளாவியால் வெளுத்த பெண்ணை நினைத்து தின்ன சோறு செரிக்காமல் போன பலரது ரிபீட் மோட் பாடல் இது. பாடலை எஸ்பிபியும், சரணும் இணைந்து பாடியிருக்கும் அழகை விவரிப்பதைவிட அனுபவிப்பது அலாதியாக இருக்கும். மண் சார்ந்த வார்த்தைகளும், ஆர்ப்பாட்டம் இல்லாத இசையும் இப்பாடல் ஒலிக்கும் திசையெங்கும் நம் மனதை பறக்கச் செய்யும்.

விழிகளில் ஒரு வானவில்: தெய்வத்திருமகள் திரைப்படத்தில் வரும் அற்புதமான மெலோடி இது. மான்டேஜ் ஷாட்களுக்கு ஏற்றபடி சைந்தவியின் சன்னமான குரலில் வரும் இப்பாடல் மனதை இலகுவாக்கி, சிறகடிக்கச் செய்திருக்கும். இந்தப் பாடல் காதில் விழும் நேரம்தோறும் மனது முழுவதும் மழைச்சாரலில் மூழ்கிப்போகும். வெறுமனே கீபோர்ட், கிடார் கார்ட்ஸ் மட்டும் பேக்கப்பில் வருவது பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஜிவியின் பேஃவரைட் ஹிட்ஸில் தவிர்க்கமுடியாத இடம் இப்பாடலுக்கு உண்டு.

பிறை தேடும் இரவிலே: மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் இப்பாடல் பெண்கள் பலருக்கு மிகவும் விருப்பமான பாடல். சைந்தவியின் குரலில் வரும் இப்பாடலில், பெண் மனதின் விருப்பங்கள், ஆசை, கனவு, ஏக்கம், எதிர்பார்ப்பு என எல்லாமே கலந்திருக்கும். "உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி… உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி" என ஜிவியின் குரலில் வரும் வரிகள் காதலின் வலிகளை பாடல் கேட்பவர்களுக்கு மிருதுவாக கடத்தியிருக்கும். இரவு நேர பண்பலை அலைவரிசைகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகும் பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது.

ஒரு பாதி கதவு நீயடி: எதிர்பார்த்த அளவு வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும், தாண்டவம் படத்தில் வந்த இப்பாடலை மறக்கவே முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஜிவியின் ஹிட் லிஸ்ட் இப்பாடல் இல்லாமல் முழுமை பெறாது. வந்தனா ஸ்ரீனிவாசன் ஹரிச்சரண் குரலில் வரும் இப்பாடல் அருமையான மெலோடி. இந்த பாடலுக்கும் ரசிகர்கள் ஏராளம்.

அங்யாடே அங்யாடே: ராஜாராணி படத்தில் வரும் இப்பாடல் வித்தியாசமான மெலோடி முயற்சி. சக்தி ஸ்ரீகோபாலனின் குரலில் வரும் இப்பாடலுக்கு பெண் ரசிகைகள் அதிகம். காதலனது ரசனைகளையும், குறும்புத்தனங்களையும் பட்டியலிட்டு மகிழ்ந்து ரசிக்கும் பெண்ணின் குரலாக. இப்பாடலை அமைத்திருப்பார் ஜிவி. இப்படத்தில் வரும் மற்ற பாடல்களைவிடவும் இந்த பாட்டுக்கு மிகப்பெரிய ரசிகப்பட்டாளம் உண்டு.

வெய்யோன் சில்லி: இசையுலகில் ஜிவி நிலைத்திருக்கச் செய்வது அவரிடம் உள்ள மண் சார்ந்த இசைநுட்பம்தான். குறிப்பாக சூரரைப்போற்று படத்தில் வரும் இப்பாட்டின் அழகே அதில்வரும் அழகிய தமிழ்ச் சொற்கள்தான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரலில் உச்சரிக்கப்படும் அந்த தென்தமிழகத்து வழக்குச் சொற்கள் உடைந்து சிதறி மனதை கீறும் சுகத்தை இந்தப்பாடல் கொடுத்திருக்கும்.

ஒரு தல காதல தந்த: நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஜிவி இசையில் மீண்டும் வந்த மனதை மயக்கும் பாடல்தான் இது. வாத்தி திரைப்படத்தில் வந்த இப்பாடலை தனுஷுடன் இணைந்து ஸ்வேதா மோகன் பாடியிருப்பார். பாடலின் தொடக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசையும், லேலேலேலேலே என வரும் சரணத்துக்கு இடையில் வரும் கோரஸும் அற்புதங்களை உணரச் செய்திருக்கும். அதிலும், "அடியாத்தி இது என்ன ஃபீலு , உன்னால நான் ஃபெயிலு, புடிக்காம ஓட்டுனேன் ரீலு... இனிமேல் நான் உன் ஆளு" என்ற வரிகள் வரும் இடங்களை அத்தனை அழகாக கம்போஸ் செய்திருப்பார் ஜி.வி.

இன்று - ஜூன் 13 - ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x