Published : 26 Oct 2017 09:48 AM
Last Updated : 26 Oct 2017 09:48 AM
வரும் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்திலும், கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சிகளிலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல். இப்போது நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்து வருகிறார். மேலும், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடனும் ஆலோசித்து வருகிறார்.
தனது அரசியல் பார்வைக் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோருடனும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கமலிடமிருந்து அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடவுள்ளார் கமல். அன்றைய தினத்தில் தனது நற்பணி மன்றம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வார். ஆனால், இம்முறை ரசிகர்களை அதிகமாக திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டு வருகிறார் கமல். அதில் தனது அரசியல் கட்சி குறித்த தகவல்களையும், கட்சியின் சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் வெளியிட இருப்பதாக அவருடைய நண்பர்கள் தெரிவித்தார்கள். மேலும், அன்றைய தினமே கட்சியின் பெயரையும் வெளியிடவுள்ளார். இதற்கான பெயரையும் கமல் இறுதி செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார்கள்.
'டிசம்பரில் அறிவிக்க ரஜினி திட்டம்'
நேற்றிரவு '2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக துபாய்க்கு குடும்பத்தினருடன் சென்றார் ரஜினி. சமீபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில், "அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய் விட்டது. போர் வரும்போது பார்த்துக் கொள்வோம்" என்று தானும் அரசியிலுக்கு வரவிருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ம் தேதி சென்னையில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவுள்ளார் கமல். அன்றைய தினத்தில் அவரும் தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கலாமா என்று தனது நண்பர்களுடன் பேசி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT