Published : 12 Jun 2023 11:04 AM
Last Updated : 12 Jun 2023 11:04 AM
சென்னை: சமீபகாலமாக உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட நடிகர் ரோபோ சங்கர், தனது உடல் எடை குறைவுக்கான காரணம் குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
தொலைகாட்சியில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தடம் பதித்தவர் ரோபோ சங்கர். தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது ‘அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு’ காமெடி மிகவும் பிரபலம். சினிமா தவிர்த்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வந்தார் ரோபோ சங்கர்.
சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரோபோ சங்கருக்கு என்னவானது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். காரணம் அவரது கட்டுமஸ்தான உடல். திடீரென அவர் கடுமையாக உடல் இளைத்தது குறித்து பலவாறான கருத்துகள் பரவி வந்தன. ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்றும், அவர் எழுந்து நிற்கவே முடியாமல் சிரமப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிவந்தன. இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தனது உடல் எடை குறைந்தது குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார் ரோபோ சங்கர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் என்னுடைய கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால் தான் என்னால் விரைவில் மீண்டு வர முடிந்தது.
கடந்த நான்கு மாதங்களாக நிறைய காமெடி நிகழ்ச்சிகளை பார்த்தேன். எத்தனையோ மக்களை நான் சிரிக்க வைத்திருக்கிறேன். ஆனால் என் கஷ்டத்தை தீர்த்தது காமெடி நிகழ்ச்சிகள் தான். அதிலும் விஜய் டிவி ராமருடைய காமெடியை அசைக்கவே முடியாது.
இவ்வாறு ரோபோ சங்கர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment