Published : 11 Oct 2017 03:38 PM
Last Updated : 11 Oct 2017 03:38 PM
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ஒரு பங்காக இருந்து அந்த உற்சாகத்தை உணர வேண்டும் என்பதற்காகவே ‘காலா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீல் தெரிவித்துள்ளார்.
‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. இதில் நடிகை அஞ்சலி பாட்டீல் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், "நான் இந்த படத்துக்காக ஒப்பந்தமானபோது, எனது திறமையைக் காட்ட இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பிருக்காது என்பது எனக்குத் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் நடிக்கும் உற்சாகம் எப்படியிருக்கும் என்பதை உணரவே இதை ஒப்புக்கொண்டேன். அவருடன் இணைந்து நடிக்கும் அனுபவத்துக்காக ஒப்புக்கொண்டேன்.
அவர் நல்லவைகளின் மறுவடிவம். அப்படியான மனிதர்களை கற்பனைக் கதைகளில் மட்டுமே பார்த்திருப்போம். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரிடத்திலும் நன்றாக நடந்து கொள்கிறார். தமிழ் சினிமாவின் வேலை செய்யும் முறை வித்தியாசமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது கடினமாக இருந்தது. ஆனால் இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொருநாளும் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கவே 500க்கும் அதிகமான மக்கள் திரண்டுவிடுவார்கள். அவர்கள் நடுவில் நடிப்பது நல்ல அனுபவமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
தனுஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நானா படேகர், பங்கஜ் த்ரிபாதி, ஹ்யூமா குரேஷி, சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT