Published : 01 Oct 2017 11:18 AM
Last Updated : 01 Oct 2017 11:18 AM

கேளிக்கை வரி விதிப்பு அமலுக்கு வந்தது: தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு

தமிழ் மொழி படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த 27-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், 30 சதவீத கேளிக்கை வரியை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி மட்டும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ் மொழி படங்களுக்கு 10 சதவீதமும், மற்ற மொழி படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது கடந்த 27-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேளிக்கை வரி அமலுக்கு வந்திருப்பதால், திரையரங்க கட்டணமும் உயரும் என்று தெரிகிறது. புதிய கட்டண நிர்ணயம் தொடர்பாக வரும் 4-ம் தேதி முடிவு செய்ய உள்ளதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், ‘சண்டக்கோழி 2’ படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அவசர ஆலோசனை

திருட்டு விசிடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத அரசு, கேளிக்கை வரி விதித்திருக்கிறது. மாநகராட்சி கேளிக்கை வரி கூடாது என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்தும், தற்போது கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருட்டு விசிடியைத் தாண்டி இன்னொரு சுமை, தயாரிப்பாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்கள்போல, ஜிஎஸ்டி வரி மட்டுமே இருக்க வேண்டும்; கேளிக்கை வரி கூடாது என்று மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். இதுகுறித்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் 1-ம் தேதி (இன்று) திறக்கப்படுகிறது. இதில் துணை முதல்வர் கலந்து கொள்கிறார். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் திறக்கப்படும். அங்கு எம்ஜிஆர், சிவாஜி சிலைகள் நிறுவப்பட்டு பிரம்மாண்டமான விழா நடத்தப்படும்.

இவ்வாறு விஷால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x