Published : 16 Sep 2017 07:22 AM
Last Updated : 16 Sep 2017 07:22 AM

அரசியலில் ரஜினியுடன் இணைவீர்களா? - ‘தி இந்து’ யாதும் தமிழே விழாவில் நடிகர் கமல்ஹாசன் ருசிகர பதில்

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, ‘யாதும் தமிழே’ விழா சென்னையில் நேற்று தொடங்கியது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது அமைதியாகஇருந்த நீங்கள் தற்போது திடீரென பொங்கியது ஏன்?நீங்கள் அப்போது நடித்தீர்களா இல்லை இப்போது நடிக்கிறீர்களா?

இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட நீங்கள் (வாசகர்களை பார்த்து) சொன்ன பதில் நியாயமானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது பதிலல்ல; தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் நல்ல நடிகன்தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று அவர்களுக்கு வந்த சந்தேகத்துக்கு பல நடிகர்கள் காரணம். நடிப்பை தொழிலாக பார்க்காமல் பதவிக்காக அதை செய்தவர்களை சொல்கிறேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நம்புகிறார்கள். இந்த முகம் எப்படிப்பட்ட முகம் என்பது போகப்போகத் தெரியும்.

அகிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும்தீர்வு காண முடியுமா? ஜல்லிக்கட்டுக்காக கூடியவர்கள் வேறுஒரு பிரச்சினைக்காக ஏன் ஒன்று கூடமாட்டேங்கிறாங்க?

இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. இது ஆரம்பக் கூட்டம். நினைத்தால் இதுபோல் அறவழியில் போராட முடியும். அகிம்சை இந்தக் காலத்தில் பலிக்குமா? கோழைகள் அதிகமாகிவிட்டதால் அகிம்சை பலிக்காது. அகிம்சையின் உச்சகட்டம் மாவீரம். மாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாக்களை எதிர்கொள்ளும் அந்த வீரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.

தமிழக முதல்வர்களை சந்திக்காமல் கேரள முதல்வரை சந்தித்ததன் நோக்கம் என்ன?

இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் வருகிறார்கள். நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன். ஆனால் முடிவை யோசித்துதான் எடுப்பேன். அது எனக்கு மட்டுமானதல்ல; பல பேருக்காக எடுப்பது. நீங்கள் கொடுக்கும் பலமும், தைரியமும், அறிவுரையும் தான்.. இதோ 'தி இந்து'வுக்கு தெரியும். அந்த சிஸ்டம் எப்படி வெற்றியடைகிறது என்று. நீங்கள் சொன்னதுதான் என்கிறார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் சொல்லுங்கள். கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி, லேசா அழுத்தினால் போதும். உங்களால் செய்ய முடியும். ஊழலற்ற தலைமை வேண்டும் என்றால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை 5 மாதத்தில் சம்பாதிக்கலாம். 5 ஆயிரம் ரூபாய் தப்பான வியாபாரம்; ஏமாற்று வேலை.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால்,அதில் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு இங்கிருந்து (மக்களை பார்த்து) சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை அவரிடம் பேசுவதை உங்களிடம்தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

எங்களுக்கு நல்ல தலைவர் வேண்டும். அரசியல் பிரகடனத்தை முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

முடிவு செய்ய வேண்டியது நீங்கள். நானல்ல. அவசரமில்லாமல் நீங்கள் முடிவு செய்ய வேண்டி உள்ளது. இன்னும் பல மேடைகள் உள்ளன. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் பிறந்த நாள். புரட்சி பிறந்த நாளில் தேடி வைப்போம். நமக்கு வேண்டியது தேதி. ஜோசியம் தேவையில்லை. நல்ல நாளில் முடிவு செய்வோம்.

செப்டம்பர்17அன்று அறிவியுங்கள் ?

கண்டிப்பாக எந்த வருடம் என்பதை நான் முடிவு செய்வேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x