Published : 01 Oct 2017 02:00 PM
Last Updated : 01 Oct 2017 02:00 PM
அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் சினிமா வெற்றி, புகழ், பெயர் மட்டுமே போதாது என்று சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்புவிழாவில் ரஜினி பேசினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று(அக்டோபர் 1) காலை நடைபெற்றது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் சிவாஜியின் குடும்பத்தினர், ரஜினி, கமல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:
துணை முதல்வர் ஓபிஎஸ் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது நிறைய முறை நிரூபணமாகியுள்ளது. கால காலத்திற்கும் தலைநிமிர்ந்து நிற்கப் போகிற இந்த மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இதனால் இன்னமும் அதிர்ஷ்டசாலியாகியுள்ளார்.
சிவாஜி சார் நடிப்பு சக்கரவர்த்தி. இப்படித் தான் நடிக்கணும். இப்படித் தான் வசனம் பேச வேண்டும், இப்படித் தான் நடக்கணும்னு என்றிருந்த காலகட்டத்தில் நடிப்பு, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்திலுமே ஒரு புரட்சியை உருவாக்கி இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநிலத்திலும் உள்ள நாயகர்கள் எல்லாம் இந்த மாதிரியொரு நடிகரைப் போல நாம் நடிக்கவே முடியாது என்று பாராட்டப்பட்ட மகா நடிகன்.
அதற்காக இந்த மணிமண்டபம் கட்டினார்களா, சிலை வைத்தார்களா?. ஒரு நடிகனாக இருந்திருந்தால் மட்டும் அவருக்கு இது போன்றதொரு மணிமண்டபம் கட்டியிருக்க மாட்டார்கள். அது எவ்வளோ பெரிய நடிகனாக இருந்தாலும் சரி. ஏன் சிவாஜி சாருக்கு மணிமண்டபம் கட்டினார்கள், சிலை அமைத்தார்கள் என்றால் அவருடைய நடிப்புத்துறையிலிருந்து, நடிப்பாற்றலிலிருந்து அவர் நடித்த, படித்த சுதந்திர போராட்ட நாயகர்களின் கதைகளில் நடித்து கடைக்கோடி மக்கள் வரை கொண்டு போய் சேர்த்தார். அதனால் மட்டுமே அவருக்கு மணிமண்டபம்.
கடவுள் மறுப்புக் கொள்கை தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்த காலக்கட்டத்திலேயே, நெற்றியில் விபூதியைப் போட்டு தனது நடிப்பாற்றலில் உச்சத்தைத் தொட்டவர் சிவாஜி சார். அதுக்குத்தான் இந்த மணிமண்டபம்.
நாம் மண்ணோடு மண்ணாக போறவங்க கூட பழகுகிறோம். சாம்பலாக போறவங்க கூட பழகுகிறோம். ஆனால், இந்தமாதிரி சிலையாக வாழப் போறவங்க கூட பழக வேண்டும். கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே இது மாதிரி சிலையாக நிற்கிற வாய்ப்பு கிடைக்கும். அதிலேயும் இது மக்களால் தேர்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வைக்கப்பட்ட சிலை. இப்படிப்பட்ட மகானோட பழகியிருக்கோம் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை.
இது அரசியல், சினிமா துறை இரண்டும் சேர்ந்து கலந்துக் கொண்ட ஒரு விழா. சிவாஜி சார் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலுக்கும் வந்தார். தனிக்கட்சி ஆரம்பித்து அவர் சொந்தத் தொகுதியிலேயே நின்று தோற்றுவிட்டார். அது அவருக்குக் கிடைத்த அவமானம் அல்ல. அந்தத் தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம்.
இதன் மூலமாக ஒரு செய்தியைச் சொல்லிட்டுப் போயிருக்கார் என்று தான் சொல்ல வேண்டும். அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் சினிமா வெற்றி, புகழ், பெயர் மட்டுமே போதாது. அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாகத் தெரியாது. கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அவருக்கு தெரிந்தாலும் எனக்குச் சொல்ல மாட்டார்.
ஒருவேளை இரண்டு மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால் கமல் சொல்லியிருப்பாரோ என்னவோ..?. "நீங்க திரையுலகத்தில் எனது மூத்த அண்ணன். நீங்கள் எனக்குச் சொல்லணும்"னு எனக் கேட்டால், ”நீ என்கூட வா.. சொல்றேன்”னு எனச் சொல்கிறார்.
இதுவொரு அற்புதமான விழா. நடிகர் திலகத்திற்கு இப்படியொரு மணிமண்டபம் கட்டிக் கொடுத்த ஜெயலலிதா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலையை அமைத்த கருணாநிதி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT