Published : 30 Oct 2017 06:27 PM
Last Updated : 30 Oct 2017 06:27 PM
சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் சுஜா வாருணி.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெண்களுக்கு எதிராக நம் நாட்டில் நடந்து வரும் சமீபத்திய அநீதிகளில் இருந்து விடுபட முடியாமல் இந்தக் கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
விசாகப்பட்டினத்தின் நெடுஞ்சாலையில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார், இரண்டு நாட்களுக்கு முன் மும்பை ரயிலில் பயணிகள் சூழ்ந்திருக்கும் போதே பெண்ணிடம் பாலியல் ரீதியில் தவறாக ஒரு ஆண் நடந்து கொண்டார். மும்பையில் டியூசன் சென்று திரும்பிய ஒரு மாணவி பாலியல் துன்புறத்தலால் பாதிக்கப்படுகிறார். அதே போல கேரள மாநிலத்தில் ஒரு பெண் தனியே நடந்து போகும்போது, உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகினார்.
இப்படி நாடு முழுக்க நடக்கும் வேதனை நிகழ்வுகளை இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்கள் எதிர்கொண்டு வாழ்வது? ஆணுக்கும், பெண்ணுக்கும் சகோதர உணர்வு இருக்க வேண்டும் என பள்ளியில் பயின்ற பாடங்கள் எல்லாம் நன் மனதைவிட்டு எப்படி வெளியேறியது?
ஒரு பெண் உடல் ரீதியாக பாதிக்கப்படும் போது அங்கே சுற்றி இருப்பவர்கள் அதை தட்டிக் கேட்காமல் கேமராவில் படம் பிடிக்கும் சம்பவத்தை விட கொடுமையான சம்பவம் எங்கேயாவது நடக்குமா?
நம் மக்கள், நம் சமூகம், நம் உறவுகள் என்ற உணர்வு நமக்கு வர வாய்ப்பே இல்லையா?. சமீபத்திய பெண்களுக்கு எதிரான நிகழ்வுகள் எல்லாம் பெண் இனத்தை அழிக்கும் சம்பவமாகவே பார்க்கிறேன். அநியாயத்தை தட்டிக் கேட்கும் உரிமை நம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆண், பெண் என்று பார்க்காமல் இதற்கு குரல் கொடுக்க நாம் அனைவருமே முன் வர வேண்டும். பெண்களுக்கு இன்னல்கள் நேரும் போது உடனடியாக அதற்கு தண்டனை அளிக்க இந்த அரசும் தயாராக இருக்க வேண்டும்
இவ்வாறு சுஜா வாருணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT