Published : 05 Jun 2023 05:46 AM
Last Updated : 05 Jun 2023 05:46 AM

‘குழந்தைகள் உலகததை சொல்லும் படங்கள் குறைவு’ - இயக்குநர் பாரதி கணேஷ்

சென்னை: விஜயகாந்த், சிம்ரன் நடித்து வெற்றிபெற்றப் படம், ‘கண்ணுபட போகுதய்யா’. 1999ம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பாடல்களும் அப்போது சூப்பர் ஹிட். இதை இயக்கியவர் பாரதி கணேஷ். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது குழந்தைகளுக்கானப் படத்தை இயக்குகிறார்.

வெற்றி படம் கொடுத்தும் அடுத்தப் படத்துக்கு ஏன் இவ்வளவு கால இடைவெளி?

இடைவெளின்னு சொல்ல முடியாது. ‘கண்ணுபட போகுதய்யா’ படத்துக்குப் பிறகு தெலுங்குக்குப் போயிட்டேன். மோகன்பாபு நடிக்கும் ஒரு படத்துக்காக அங்க போனேன். அதுல, ரஜினி சார் கவுரவ வேடத்துல நடிக்கறதாகவும் இருந்தது. சில காரணங்களால அந்தப் படம் ஆரம்பமாகலை. பிறகு கிருஷ்ணாடு நடிச்ச ‘அம்மாயிகுடு’ , தருண், யாமி கவுதம் நடிச்ச ‘யுத்தம்’ உட்பட சில படங்கள் பண்ணினேன். இப்ப தமிழுக்கு வந்துட்டேன்.

குழந்தைகளுக்கான படம் பண்ண ஏதும் காரணம் இருக்கா?

கமர்சியல் படங்கள் தொடந்து வந்துகிட்டு இருக்கு. ஆனா, குழந்தைகளின் உலகத்தைச் சொல்கிற படங்கள், ரொம்ப குறைவாகத்தான் வருது. அப்படி வரும் படங்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதனால எனக்கு கிடைச்ச, கேள்விபட்ட அனுபவங்களை வச்சு ஒரு கதை பண்ணினேன். ‘காக்கா முட்டை’, ‘அப்பா’ படங்கள் மாதிரி இது இருக்கும். குழந்தைகளின் வாழ்க்கையை, அவங்க எண்ணங்களை, செயல்பாடுகளை, அவங்களை எப்படி வளர்க்கிறோம் அப்படிங்கறதை சொல்ற படமா இது இருக்கும். நம்ம வயசுல வாழ்ந்த வாழ்க்கையை நம் குழந்தைகள் வாழலை. அந்த அனுபவங்களை அவங்களுக்கு கத்துக் கொடுத்திருக்கோமா அப்படிங்கறதும் இல்லை. அதோட, குழதைகளை நாம எப்படி பார்க்கிறோம் அப்படிங்கறதே வேறயா இருக்கு.

ஷாம் கதாநாயகனா நடிக்கிறாரா?

அவர் ஒரு முக்கியமான கேரக்டர் பண்றார். ஒரு குழந்தைக்குத் தந்தையா வர்றார். அவர் கேரக்டர் பேசப்படும் விதமா இருக்கும். ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன், அஜய் , ஆஷிகா யாஷ்ன்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு பண்றார். 5இ கிரியேஷன்ஸ் சார்பா சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் தயாரிக்கிறாங்க. ஒரு படைப்பாளியா எனக்கு இது முக்கியமான படமா இருக்கும்.

இளையராஜாவின் 80-வது பிறந்த நாள்ல படத்தைத் தொடங்கி இருக்கீங்க...

நம்ம காலத்துல இளையராஜாவை விட்டுட்டு, இசை பத்தி பேசவே முடியாது. ஊர்ல இருந்து என்னை போன்றவங்களை சினிமாவுக்கு விரட்டியதே அவர் பாடல்கள்தான். இன்னைக்கும் அவர் பாடல்கள்தான் என்னை போல பலருக்கு எல்லாமுமாக இருக்கு. இந்தக் கதைக்கு அவர் இசை அமைச்சாதான் சரியா இருக்கும்னு நினைச்சேன். கதையை கேட்டுட்டு சரி பண்றேன்னு சொன்னார். அவர் கூட வேலை பார்க்கிறதையே பெரிய விஷயமா நினைக்கிறேன். இந்தப் படம் கமர்சியலாகவும் விருதுக்காகவும் உருவாகிற படமா இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x