Last Updated : 22 Oct, 2017 09:36 AM

 

Published : 22 Oct 2017 09:36 AM
Last Updated : 22 Oct 2017 09:36 AM

வெட்கமே இல்லாமல் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? - எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி

வெட்கமே இல்லாமல் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? என்று 'மெர்சல்' விவகாரம் தொடர்பாக எச்.ராஜாவுக்கு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக-வைச் சேர்ந்த எச்.ராஜா, "’மெர்சல்’ காட்சிகளை இணையத்தில் பார்த்தேன்" என்று பேசினார். இதனால், திரையுலகினர் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

எச்.ராஜாவின் பேச்சு குறித்துத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால் தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜாவுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்?. உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x