Published : 09 Oct 2017 10:40 AM
Last Updated : 09 Oct 2017 10:40 AM
'சோலோ'வை கொன்றுவிடாதீர்கள், கெஞ்சிக் கேட்கிறேன் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துல்கர் சல்மான் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், தன்ஷிகா, நேகா சர்மா, ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சோலோ'. அக்டோபர் 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படக்குழுவினர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றியிருக்கிறார்கள்.
இப்பிரச்சினைக் குறித்து நாயகன் துல்கர் சல்மான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதவாது:
'சோலோ' படத்தை பார்த்த பிறகு அது பற்றி எழுதலாம் என்றிருந்தேன். வேலை காரணமாக இன்றே எனக்கு படம் பார்க்க நேரம் கிடைத்தது. பார்த்தேன். நான் நினைத்துப் பார்த்ததை விட நன்றாக இருந்தது. ஒவ்வொரு நொடியையும் ரசித்தேன். ஒரே நேரத்தில் இரு மொழியில் எடுக்கப்பட்ட படமென்பதால் வசன ரீதியாக சில பிரச்சினைகள் அங்கங்கு இருந்தன. 'சேகர்' கதை இன்னும் கொஞ்ச நேரம் ஓடியிருக்கலாம். ஆனால் எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. எனது இயக்குநர் பிஜாய் நம்பியார் மனதில் வைத்திருந்த அசல் வடிவம் அது.
எந்த ஒரு நடிகருக்கும் 'சோலோ' போன்ற படத்தில் நடிப்பது கனவுபோல. நான் அந்த கதைகளைக் கேட்ட நொடியிலிருந்து எனக்கு அது பிடித்திருந்தது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் பிடித்திருந்தது. தற்போது திரையில் இருக்கும் இறுதி வடிவமும் எனக்கு பிடித்திருக்கிறது. இந்த படத்துக்காக ஆத்மார்த்தமாக உழைத்தேன். குறைந்த பட்ஜெட்டில் அப்படி ஒரு படம் எடுக்க எங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி அதற்காக உழைத்தோம். இப்படி ஒரு படம் கிடைத்தால், நான் நம்பும் படங்களுக்கு, நாம் வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கும் படங்களுக்கு மீண்டும் அப்படி உழைக்கத் தயார்.
’சார்லி’, ’பெங்களூர் டேஸ்’ படத்தைப் போல ’சோலோ’ இல்லை என சிலர் என்னிடம் சொல்கின்றனர். ஏன் இதில் நடித்தேன் என கேட்கின்றனர். இதை நான் தவித்திருக்கலாம் என்கின்றனர். இது போன்ற பரீட்சார்த்த முயற்சி தேவையற்றது என்கின்றனர். ஆனால் ஒன்று தெரியுமா.. எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது. நான் தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆம் சினிமாவில் அதிகமாக பயன்படுத்திவிட்ட வார்த்தை தான் அது. வித்தியாசம். பின் ஏன் அன்பார்ந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஒரு தரப்பு வித்தியாசத்தைக் கண்டால் பிடிக்காமல், பயந்து கிண்டல் செய்கிறது.
இந்த பூமியில் 7 பில்லியன் மக்கள் இருக்கின்றனர். அவ்வளவு கதைகளும் இருக்கின்றன. அவ்வளவு பிரச்சினைகளும் இருக்கின்றன. அவ்வளவு வித்தியாசங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. உங்களுக்கு அது தெரியாதென்பதால் அது இல்லாமல் போய்விடாது. உங்களுக்கு அது பற்றிய ஞானம் இல்லையென்றால் அது தவறென்றாகிவிடாது. அப்படி நினைத்தால் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள், முன் தீர்மானத்தோடு இருக்கிறீர்கள், அல்லது இரண்டும் என்று அர்த்தம். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே. ஏன் இந்த முன் தீர்மானம்?
செய்திகளோ, சந்திக்கும் மக்களோ, பார்க்கும் படங்களோ, படிக்கும் புத்தகங்களோ.. எல்லா இடங்களிலிருந்தும் கதைகள் தேடுகிறேன். எந்த கதையையும் சொல்லும் தைரியத்தை என் ரசிகர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அசல் கதையாக இருந்து, அதை நன்றாகச் சொன்னால் நீங்கள் கொண்டாடுவீர்கள். நல்லது, மோசமனாதா, அசிங்கமானதா, இதுவே நான் கதைகளை தேர்ந்தெடுக்கும் காரணிகள்.
எனவே, ஒரு சிலர், ’சோலோ’ படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ருத்ராவின் கதையைப் பற்றி சிலர் கிண்டல் செய்து பேசும்போது என் மனமுடைகிறது. நடிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் நடித்த கதை அது. நாசர் அவர்களோ, ஹாசினி அவர்களோ, நேஹாவோ, நானோ, அது மிகவும் தனித்தன்மையுடனும், தைரியமாகவும் இருப்பதாக நினைத்து ஆர்வமாக இருந்தோம். அது சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது, அதைப் போன்ற சில செய்திகளையும் நாம் கண்டிருக்கலாம். அதுபற்றி படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதை நகைச்சுவையாகச் சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.
அது எதிர்பாராதவிதமாக நகைச்சுவையாக மாறிவிட்டது என சிலர் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹாசினி அவர்களின் கதாபாத்திரம், அச்சத்துடனும், தர்மசங்கடத்துடனும் ருத்ரா கதாபாத்திரத்திடம் அந்த உண்மையை உடைக்கும் காட்சியில், அவர்களின் அற்புதமான நடிப்பு, அது எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்றாக இருந்தது. அது ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டது. நான் சரி என்று நினைத்த வகையில் அதை புரிந்து கொண்டேன். என்னைப் போல ஒரு நடிகனுக்கு அது புதிது, முன் எப்போதும் பார்த்திராதது. அது மற்றதிலிருந்து வித்தியாசப்பட்டிருந்ததால், அந்தக் காட்சியை இதுவரை எந்தக் காட்சியையும் ரசிக்காத அளவுக்கு நான் ரசித்தேன். பிஜாய் அதை சொல்லும்போது நகைச்சுவையாகத் தான் இருந்தது.
அவர் கட் சொல்லும்போது, டப்பிங்கில் பேசும்போது, நான் திரையில் பார்க்கும்போது நகைச்சுவையாகத் தான் இருந்தது. கதாபாத்திரங்களின் பார்வையில் அது நகைச்சுவை அல்ல. அவர்கள் சோகமாகவும், உடைந்து போயும் இருப்பார்கள். திரையில் அது விநோதமாகவும் இருக்கும். அதிலும் ருத்ரா கதாபாத்திரத்துக்கு. மக்கள் எங்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்களா, எங்களைப் பார்த்து சிரிக்கிறார்களா என்பது புரியவில்லை. டார்க் காமெடி வகை அப்படித்தான் விநோதமாக இருக்கும். எப்போதும் அப்படித்தான். அதுதான் எங்கள் நோக்கமும் கூட.
உங்களுக்கு அது புரியவில்லை என்பதால், அதை நக்கலடித்து, தியேட்டரில் கூச்சல் போட்டு, எதிர்மறையான எண்ணங்களைப் பரப்பி, படத்தை வெறுத்து தரக்குறைவாக பேசுவது படத்தை சாகடிக்கும். எங்கள் மனங்களை உடைக்கும். இவ்வளவு நாள் நீங்கள் தந்துகொண்டிருந்த ஊக்கத்தை, தைரியத்தை உடைக்கும்.
அதனால், உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சோலோவை சாகடிக்காதீர்கள். திறந்த மனதுடன் படத்தைப் ஒருமுறை பாருங்கள். கண்டிப்பாக ரசிப்பீர்கள். நான் எப்போதும் இயக்குநர் பிஜாய் நம்பியார் மற்றும் அவர் நினைத்த படத்தின் வடிவத்துக்கு ஆதரவாக இருக்கிறேன். படத்தை வெட்டி மீண்டும் மாற்றுபவர்கள் படத்தை சாகடிப்பவர்களே.
இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT