Published : 04 May 2023 06:49 PM
Last Updated : 04 May 2023 06:49 PM

“எனது 25 வருட திரைப்பயணத்தில் இது பெரிய பின்னடைவு” - ‘சாகுந்தலம்’ தோல்வி குறித்து தில் ராஜு

சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ படத்தின் தோல்வி குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு கூறும்போது, “என்னுடைய 25 ஆண்டு கால திரைப்பயணத்தில் இப்படத்தின் தோல்வி பெரிய பின்னடைவு” என்று தெரிவித்துள்ளார்

இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சாகுந்தலம்’. மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் 3டி தொழில்நுட்பம் இல்லாமல் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பிறகு 3டி தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றுவதற்காக அந்த ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஒருவழியாக பல்வேறு ரிலீஸ் தேதி மாற்றுதலுக்குப்பின் திரையரங்குகளில் வெளியான இப்படம் ‘நாடகம்’ போன்று இருப்பதாகவும், சுவாரஸ்யமற்று இருப்பதாகவும் எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின.

குணசேகர் இயக்கி இருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து தில் ராஜுவும் தயாரித்திருந்தார். ரூ.60 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடியை மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியானது. மேலும், ரிலீஸுக்கு முன்பே டிஜிட்டல் உரிமையை ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் சாட்டிலைட் உரிமைக்கு ரூ.15 கோடி கேட்டதால், யாரும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான தில் ராஜு அளித்த பேட்டி ஒன்றில், “2017-ம் ஆண்டு எனக்கு மிகச்சிறந்த வருடமாக அமைந்தது. ‘சதமனம் பவதி’, ‘நேனு லோக்கல்’, ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ படங்கள் நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்தன. நான் தயாரித்த 50 படங்களில் 4 அல்லது 5 படங்கள் எனக்கு வியாபார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. அப்படிப் பார்க்கும்போது என்னுடைய 25 ஆண்டுகால திரைப்பயணத்தில் ‘சாகுந்தலம்’ பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நான் இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். பார்வையாளர்களுக்கு படம் பிடித்திருந்தால் ப்ளாக் பஸ்டர் ஆக்குவார்கள். அதே சமயம் பிடிக்காவிட்டால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தெரியும். எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். படம் வெற்றியடையும் என நம்பியதால்தான் படம் வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே பிரிவியூ ஷோவை திரையிட வைத்தேன். ஆனால், என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது. படத்தின் முதல் நாள் கலவையான விமர்சனங்கள் வெளியானபோதே நான் அதற்கு தயாராகிவிட்டேன்” என்றார் தில் ராஜு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x