Published : 04 May 2023 04:00 PM
Last Updated : 04 May 2023 04:00 PM

‘‘இதுவும் கடந்து போகும்; மீண்டு வருவோம்’’ - படங்களின் தோல்வி குறித்து நாக சைதன்யா

“ஒரு தொழிலில் உயர்வு தாழ்வு என்பது சாதாரணமானதுதான். அதன் வழியாகத்தான் நாம் பயணித்தாக வேண்டும். இதுவும் கடந்து போகும்” என கடந்த படங்களின் தோல்விகள் குறித்து நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

தெலுங்கின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா. இவரது மூத்த மகன் நாக சைதன்யா மற்றும் இளைய மகன் அகில் அக்கினேனி. திரைத்துறையில் மூவருமே நடிகர்களாக வலம் வரும் சூழலில் அண்மைக்காலமாக 3 பேரின் படங்களும் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பான் இந்தியா முறையில் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ‘தி கோஸ்ட்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

அதற்கு முன்னதாக மகன் நாகசைதன்யாவுடன் இணைந்து அவர் நடித்த ‘பங்கர்ராஜூ’ படமும் வரவேற்பை பெறவில்லை. நாக சைதன்யாவுக்கும் ‘தேங்க்யூ’, ‘லால் சிங் சத்தா’ சரியாக அமையவில்லை. அகில் அக்கினேனி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ஏஜென்ட்’ படம் 80 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.10 கோடி பாக்ஸ் ஆஃபீஸை எட்டுவதற்கே திக்குமுக்காடி நிற்கிறது.

இந்நிலையில், மூவரின் படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்காதது குறித்து ‘கஸ்டடி’ பட புரமோஷன் நிகழ்வில் நடிகர் நாகசைதன்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்போதும் வெற்றிகரமான படத்தை கொடுக்கவே நினைக்கிறோம். ரசிகர்களின் எல்லையில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். கடைசியாக வந்த சில படங்கள் வரவேற்பை பெறவில்லை. ஒரு தொழிலில் உயர்வு தாழ்வு என்பது சாதாரணமானது தான். அதன் வழியாகத்தான் நாம் பயணித்தாக வேண்டும். இதுவும் கடந்து போகும். நிச்சயமாக திரும்பி வருவோம். ‘கஸ்டடி’ படம் மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று நம்புகிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x