Published : 25 Sep 2017 09:22 AM
Last Updated : 25 Sep 2017 09:22 AM
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு மொழி கடந்து ரசிகர்கள் அளித்த பெரும் ஆதரவைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மோகன்லால் அப்பாடலுக்கு நடனம் ஆடி அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்'. இப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் இணையத்தில் வைரலானது. கேரள எல்லை தாண்டி தமிழகம், ஆந்திரா, மும்பை என பல மாநிலங்களிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. ஏன், அமெரிக்காவில் பிரபல டாக் ஷோ தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் கூட ஜிமிக்கி கம்மல் பாடல் தன்னை கவர்ந்துவிட்டதாகக் கூறினார்.
'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இப்பாடலை வினீத் ஸ்ரீநிவாசன், ரஞ்சித் உன்னி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலுக்கு, ஓனம் பண்டிகையின்போது கல்லூரி பேராசிரியர் ஷெரில் தனது சக தோழிகளுடன் நடனமாட அது சினிமாவில் இடம்பெற்ற ஒரிஜினல் பாடலைவிட பிரபலமானது. ஷெரில் ஒரே இரவில் இணையப்புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இதுவரை 17 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது ஜிமிக்கி கம்மல் நடன சவால் என்ற பெயரில் வெளியான ஷெரில் நடன வீடியோ பதிவு.
இந்நிலையில், ஜிமிக்கி கம்மல் பாடலை பெரும் வெற்றியாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படக்குழுவினருடன் இணைந்து மோகன்லால் அப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த மோகன்லால், "ஜிமிக்கி கம்மல் (#JimikkiDanceChallenge) நடன சவாலுக்காக ஆடி மகிழ்வித்த அனைவருக்கும் எனது நன்றிகள். ஜிமிக்கி கம்மல் பாடல் உலகம் முழுவதும் பரவி வெற்றி கண்டுள்ளதற்கு காரணம் உங்களது வியத்தகு ஆதரவே. இதோ உங்களுக்காக நானும் ஜிமிக்கி கம்மல் சவாலை ஏற்று நடனமாடியிருக்கிறேன். என்னுடன் எனது 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' குழுவினரும் உள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், மோகன்லால் வருகைக்கு முன்னதாக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அருண் குரியன், சரத் குமார் இருவரும் ஜிமிக்கி கம்மல் பாடல் புகழை தங்களிடமிருந்து ஷெரில் பறித்துக் கொண்டது தொடர்பாக காரசாரமாக விவாதிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதோ உங்கள் பார்வைக்காக மோகன்லால் நடனமாடும் அந்த வீடியோ இணைப்பு:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT