Published : 26 Apr 2023 02:29 PM
Last Updated : 26 Apr 2023 02:29 PM

பழம்பெரும் மலையாள நடிகர் மாமுக்கோயா காலமானார்

மாமுக்கோயா

கோழிக்கோடு: மலையாள திரைத்துறையின் பழம்பெரும் நடிகர் மாமுக்கோயா காலமானார். அவருக்கு வயது 76. தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அவரது மரணத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றபோது மாமுக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் வான்டூரில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கடந்த 1946-ல் பிறந்த மாமுக்கோயா, ஆரம்ப நாட்களில் நாடக கலைஞராக நடித்து வந்துள்ளார். அதன்பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 1979-ல் நீலாம்பூர் பாலன் இயக்கி வெளிவந்த ‘அன்யாருடே பூமி’ அவர் நடித்த முதல் படம். காமெடி நடிகராக பிரபலமடைந்த அவர் சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

தூரே தூரே ஒரு கூடு கூட்டம், காந்திநகர் இரண்டாவது தெரு, நாடோடிக்கட்டு, பட்டணப்பிரவேசம், உன்னிகளே ஒரு கதை பறையாம், வடக்குநோக்கியந்திரம், கிரீடம், ஒப்பம், உஸ்தாத் ஹோட்டல், சந்தேசம், செங்கோல், ஷார்ஜா டூ ஷார்ஜா, வெட்டம், ஸ்ரீதரண்டே ஒண்ணம் திருமுறை, கரன்சி, ஒரு மருபூமி கதை, இந்திய ரூபாய் , மின்னல் முரளி, குருதி, தீர்ப்பு போன்ற படங்களில் அவரது நடிப்பு கவனம் பெற்றுள்ளது.

மாமுக்கோயா - சுஹாரா தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். கடைசியாக அவரது நடிப்பில் ‘சுலைகா மன்சில்’ படம் வெளியாகி இருந்தது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பழம்பெரும் நடிகர் இன்னொசென்ட் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் அடுத்தடுத்து மூத்த நடிகர்களின் மறைவு பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x