Published : 05 Apr 2023 04:12 PM
Last Updated : 05 Apr 2023 04:12 PM
“கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்வேன். ஆனால், தேர்தலில் போட்டியிடவோ, கட்சியில் இணையவோ மாட்டேன்” என்று கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் கர்நாடகாவில் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இணைந்து கிச்சா சுதீப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நான் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரிக்கிறேன். அவர் என் மாமாவைப் போல. ஆரம்ப காலத்தில் அவர் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பொம்மை மற்றும் அவர் ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்வேன்.
பிரதமர் மோடி எடுத்த சில முடிவுகளை நான் முற்றிலும் மதிக்கிறேன். ஆனால், இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால், கட்சியில் இணையவோ, தேர்தலில் போட்டியிடவோ மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பசரவாஜ் பொம்மை பேசுகையில், “அவர் எனக்கு ஆதரவளித்துள்ளார். எனக்கு ஆதரவளித்தார் என்பதற்கு அவர் பாஜகவை ஆதரிக்கிறார் என்று அர்த்தம். கிச்சா சுதீப் மிகவும் பிரபலமானவர். அது பாஜகவுக்கு பலமாக அமையும். தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT