Published : 21 Mar 2023 03:34 PM
Last Updated : 21 Mar 2023 03:34 PM
பழம்பெரும் மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவ் உயிரிழந்துவிட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம்’ என அவரே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 700க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கோட்டா சீனிவாச ராவ். பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர், தமிழில், ‘சாமி’, ‘குத்து’, ‘கோ’, ‘திருப்பாச்சி’ உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் தனி முத்திரை பதித்துள்ளார். 1990-ம் ஆண்டு பாஜகவில் இணைந்து கோட்டா சீனிவாசராவ், 1999 - 2004 வரை ஆந்திரப் பிரதேச விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
மேலும், கடந்த 2015-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், கோட்டா சீனிவாச ராவ் உயிரிழந்ததாக வதந்தி பரவிய நிலையில், அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி என் கவனத்திற்கு வந்தது. 10 காவல் துறையினர் என் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக வந்தனர். அவர்களிடம் எதிர்காலத்தில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என வலியுறுத்தினேன்.
நான் நாளை கொண்டாடப்பட உள்ள உகாதி பண்டிகைக்கான பணிகளில் பிஸியாக இருந்தபோது, பல தொலைபேசி அழைப்புகள் என்னை மிகவும் தொந்தரவு செய்தன. இதே என் இடத்தில் வேறு யாராவது முதியவர் இருந்திருந்தால் அவர் இதயத்துடிப்பு நின்றிருந்திருக்கும். புகழ், பணம் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க பல வழிகள் உண்டு, அதற்காக இப்படியான வதந்திகளை பரப்புவது முறையல்ல. நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
Legendary actor Kota Srinivasa Rao garu appeals to not spread any rumours and stated that he is completely fine. #KotaSrinivasaRao pic.twitter.com/H94NBBuwbu
—
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT