Published : 12 Mar 2023 01:55 PM
Last Updated : 12 Mar 2023 01:55 PM
‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடியை வசூலித்து மிரட்டியது. இப்படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் தென்னிந்திய திரைப்படத்தின் பாடல் ஒன்று முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனல் தேர்வாகியுள்ளது என்ற சிறப்பை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று (மார்ச் 12) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை இந்தியாவில் மார்ச் 13 -ம் தேதி காலை 5 மணி அளவில் ரசிகர்களால் காண முடியும்.
இந்த ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பாக 3 படங்கள் நாமினேஷனில் தேர்வாகியுள்ளன. அதன்படி சிறந்த ஆவணப்பட திரைப்பட பிரிவில் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All That Breathes), சிறந்த ஆவணப்பட குறும்பட பிரிவில் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ (The Elephant Whisperers) மற்றும் சிறந்த ஒரிஜினில் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ ஆகிய மூன்று படங்களும் தேர்வாகியுள்ளன. இந்த மூன்று படங்களும் ஆஸ்கர் வெல்லுமா? ‘நாட்டு நாட்டு’பாடலுக்கு ஆஸ்கர் கிடைக்குமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் வென்றால் இந்தியாவில் ஆஸ்கர் வென்ற முதல் தென்னிந்திய பட பாடல் என்ற பெருமையை அப்பாடல் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT