Published : 31 May 2017 12:04 PM
Last Updated : 31 May 2017 12:04 PM
கன்னட சூப்பர் ஸ்டாரின் மனைவியும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான பர்வதம்மா ராஜ்குமார் இன்று (புதன்கிழமை) காலை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பர்வதம்மா மே 14 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவில் திடீரென அவரின் ரத்த அழுத்தம் குறைந்தது. அதைத் தொடர்ந்து காலை 4.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
கன்னடத் திரைப்பட உலகில் இருந்த ஒரே பெண் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர் பர்வதம்மா. வஜ்ரீஸ்வரி கம்பைன்ஸ் மற்றும் பூர்ணிமா எண்டர்பிரைசஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களைத் தொடங்கிய அவர், ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளார்.
குறிப்பாக அவரது கணவர் ராஜ்குமார், மகன்கள் சிவ்ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் படங்கள் பர்வதம்மாவின் நிறுவனங்கள் மூலமாகவே தயாரிக்கப்பட்டன. பர்வதம்மா இதுவரை 80-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அவரது 87-வது படத்தில் பர்வதம்மாவின் பேரன் வினய் ராஜ்குமார் நடித்துவந்தார்.
தனது 13-ம் வயதில் ராஜ்குமாரைத் திருமணம் செய்த பர்வதம்மா, தன் கணவரின் நடிப்புக்கும், அவரின் ஆளுமைக்கும் பக்க பலமாக இருந்தார்.
கணவருடன் இளம் வயதில் பர்வதம்மா. |
அவரின் மறைவுக்கு கன்னடத் திரையுலகினர் உட்பட ஏராளமானோர் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் இரங்கல்
கர்நாடக முதல்வர் சித்தராமையா, ''ராஜ்குமாரின் வெற்றிக் கதையில் மாற்றவே முடியாத அத்தியாயம் பர்வதம்மா'' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT